தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவர் விவேகம் ரமேஷ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடாக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவில் வைத்தே தான் எதிர்த்ததாக தெரிவித்தார்.
தற்போது அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் மேகதாதுவில் அணைக்கட்டப்படும் என திட்டவட்டமாக கூறியிருப்பதை குறிப்பிட்ட அண்ணாமலை இதுகுறித்து தமிழக காங்கிரஸார் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் செயல்பட்டாலும் அதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பது இல்லை, அதுகுறித்து பேசுவதும் இல்லை என்றும் சாடிய அண்ணாமலை, ஸ்டாலின் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து வருகிறார் என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
மேலும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அண்ணாமலை, தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை பாஜக தடுத்து நிறுத்தும் என்றும் தெரிவித்தார்.
அந்த ஆற்றல் தங்களுக்கு உண்டு என்றும் அண்ணாமலை கூறினார். முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் வரவேற்கத்தக்கது என்ற அண்ணாமலை, முதல்வர் வெளிநாடு சென்றால்தான் தமிழகத்திற்கு முதலீடுகள் அதிகரிக்கும் என்றார். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி குறித்து பேசிய அண்ணாமலை, ஓசி பயணம் என்றும், வடக்கன்ஸ் என்றும் பேசி வரும் பொன்முடி அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்றும் விளாசினார்.