ட்விட்டர் பக்க முடக்கத்துக்கு கண்டனத்தைப் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் நன்றி

சென்னை: “எங்களது ட்விட்டர் கணக்கை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை (ட்விட்டரை) முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று (மே 31) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @SeemanOfficial முடக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கணக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அந்தப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


— செந்தமிழன் சீமான் (@NTKSeeman4TN) June 1, 2023

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டிருந்த பதிவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

காவல்துறை விளக்கம்: இதற்கிடையில் இது தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,”நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே இவ்விவகாரத்தில் சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புகள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.