தமிழகத்தில் அரசு அனுமதி பெற்று 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. சமீபகாலமாக டாஸ்மாக் கடைகளில் அரசு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் கட்டாயம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அவ்வாறு செயல்படும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற புகாரில் தற்போது வரை 1500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் டாஸ்மாக் அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் மதுபானம் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும், அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களை முறையாக கண்காணிக்க வேண்டும், தமிழகத்தில் எத்தனால் பயன்பாடு குறித்து அவ்வப்பொழுது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் MRP விலையில் மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் “வாடிக்கையாளர்கள் வரிசையாக வந்து MRP விலையை சரியாக கொடுத்து சரக்கு வாங்கிச் செல்லவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.