கர்நூல்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் அம்மாநில அரசியல் களம் அக்னி வெயிலைப் போல கனன்று கொண்டிருக்கிறது.
ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள்.
ஆந்திராவைப் பொறுத்தவ்ரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் இடையேதான் கடும் போட்டி. காங்கிரஸ், பாஜக, பவண் கல்யாணின் ஜனசேனா, கேசிஆரின் பி.ஆர்.எஸ் மற்றும் இடதுசாரிகளும் ஆந்திரா தேர்தல் களத்தில் உள்ளன.
ஆந்திரா தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில் அம்மாநில அரசியலில் பெரும் புயலை வீச செய்துள்ளார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரபாபு, ஆந்திரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ15,000 நிதி உதவி; இளம் பெண்களுக்கு மாதம் ரூ1,500; அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ20,000, வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ3,000 நிதி உதவி என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. அத்துடன் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு தேர்தல் அறிக்கையின் 2-ம் பாகமும் விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்தார் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் அறிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஆந்திராவில் தயாரானது அல்ல. அந்த அறிக்கை ஒரு கலவை சாதம். கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக வெளியிட்ட வாக்குறுதிகளை காப்பி அடித்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலானது யுத்த களமாக இருக்கும். பொதுமக்களுக்கு நிதி உதவியை வங்கி கணக்கில் செலுத்துகிற அரசு வேண்டுமா? அரசு பணத்தை சூறையாடுகிறவர்கள் வேண்டுமா? என்பதை ஆந்திரா மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.