பாலுமகேந்திரா இயக்கத்தில் 1992-ல் வெளியாகிய ‘மறுபடியும்’ என்னும் தமிழ்த் திரைப்படம், ‘அர்த்’ என்னும் இந்திப்படத்தின் ரீமேக்.
பர்வீன் பாபியுடன் தனக்கிருந்த திருமணத்திற்கு புறம்பான உறவை மையப்படுத்தி இயக்குநர் மகேஷ் பட் இயக்கிய படம் அது. மகேஷ் பட்டிற்கு மட்டுமல்ல, பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கூட இதன் திரைக்கதை பொருத்தமாக இருந்தது. எனவேதான் இந்திப் படத்தை ரீமேக் செய்யும் உந்துதல் பாலுமகேந்திராவிற்கு ஏற்பட்டிருக்கலாம். ‘Dangerously close to own life’ என்று அவரே உணரும் வகையில் இதன் திரைக்கதை அமைந்திருந்தது.

‘என்னை நான் ஆக்கிய அனைத்துப் பெண்மணிகளுக்கும் சமர்ப்பணம்’ என்று டைட்டில் கார்டில் போட்டிருந்தார் பாலுமகேந்திரா. ஷோபா, மௌனிகா என்று பாலுமகேந்திராவின் வாழ்வில் கடந்து சென்ற பெண்களின் வரிசை என்பது அத்தனை ஒன்றும் ரகசியமானதாக இருக்கவில்லை. அப்படி மறைத்து வைக்கவும் அவர் விரும்பியதில்லை. இந்தத் திரைப்படத்தை இயக்கிய சமயத்தில் தன்னைத் தானே கண்ணாடியில் பார்க்கும் அனுபவத்தை அவர் பெற்றிருக்கக்கூடும். அந்த சுயபரிசீலனை அனுபவத்திற்காகவே ‘அர்த்’ படத்தை ரீமேக் செய்ய அவர் முடிவு செய்திருக்கலாம். ஆணின் நோக்கிலிருந்து படத்தை செளகரியமாக வளைக்காமல், மணமுறிவு பெற்ற பெண்ணின் துயரம் மற்றும் மனஉளைச்சல், ஆணின் பலவீனங்கள், தடுமாற்றங்கள் போன்றவற்றையும் இணைத்து அழுத்தமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்ததற்காகவே மகேஷ் பட் மற்றும் பாலுமகேந்திரா ஆகிய இருவரையும் பாராட்ட வேண்டும்.

எந்தவொரு உறவு முறிவிலும் ஒரு பக்கத்தின் வலியும் வேதனையும் கூடுதலாக இருப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அந்த அநீதி பெண்களுக்கேதான் நிகழ்கிறது. அந்த வலியை உருவாக்குபவர்களாக ஆண்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். தன்னை கை விட்டு விட்டு திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடும் கணவனின் செயல் காரணமாக பரிதவித்துப் போகிறாள், துளசி என்கிற ஓர் இளம்பெண். அவளுடைய பரிதாபக் கதையை மிகையான நாடகத்தனங்கள் ஏதுமில்லாமல் விவரித்துச் செல்கிறது ‘மறுபடியும்’. ஆம். இது கோவலன் – மாதவி – கண்ணகி கதைதான். அந்தப் பழைய கதையை தன்னுடைய யதார்த்த மொழியில் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார் பாலுமகேந்திரா.
மறுபடியும் – கோவலன், கண்ணகி, மாதவி கதையேதான்
திரைப்பட இயக்குநர் முரளிகிருஷ்ணாவின் மனைவி துளசி. நடுத்தர வர்க்க குடும்பம். சொந்த வீட்டில் வசிப்பது துளசியின் வாழ்நாள் கனவு. அந்தக் கனவை திடீரென ஒருநாள் பரிசளிக்கிறான் கணவன். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகிறாள் துளசி. இன்பமாக சென்று கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையில் ஒரு புயல் நுழைகிறது. அந்தப் புயலின் பெயர் கவிதா. பிரபல நடிகையான கவிதா, முரளிகிருஷ்ணாவின் படங்களில் தொடர்ந்து நடிப்பதால் இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. முரளியை திருமணம் செய்து கொள்ள ஆவேசப்படுகிறார் கவிதா. ‘இந்த சமாச்சாரத்தை எப்படி மனைவியிடம் சொல்வது?’ என்று தவித்துக் கொண்டிருக்கிறான் முரளி. ஒரு நாள் குட்டு அம்பலமாகிறது.
தன் கணவன் இன்னொருத்தியுடன் பழகுவதை அறிந்து எந்தவொரு சராசரிப் பெண்ணையும் போல அதிர்ச்சியடைகிறாள் துளசி. ‘அந்த தகாத உறவை விட்டு வெளியே வந்து விடுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்கிறாள். அழுது புலம்புகிறாள். ‘என் கணவனை விட்டு விலகு’ என்று கவிதாவிடம் சண்டையிடுகிறாள். ஆனால் முரளி புது மயக்கத்தில் இருந்து விடுபடுவதாக இல்லை. கவிதாவும் விட்டுத்தருவதாக இல்லை. சுயமரியாதையுணர்ச்சி பொங்க வீட்டை விட்டு வெளியேறும் துளசி தன்னந்தனியாக வாழ்க்கையுடன் போராடுகிறாள். அவளுக்கு ஆதரவாக நிற்கிறான், ஓர் இளைஞன்.

இந்தப் பக்கம் கவிதாவின் ஆவேசம், வெறி, சந்தேகம் போன்றவற்றை தாங்க முடியாமல் முரளி அங்கிருந்து வெளியேறுகிறான். உண்மையான அன்பு துளசியிடமிருந்துதான் கிடைக்க முடியும் என்பதை இறுதியில் உணர்கிறான். ‘ஏற்றுக் கொள்’ என்று அவளிடம் வேண்டுகிறான்.
துளசி என்ன செய்தாள்? புராணக் கதாபாத்திரம் போல கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்டாளா, அல்லது புதிதாக வந்த உறவுடன் இணைந்து கணவனை பதிலுக்கு பழிவாங்கினாளா?…. கலாசாரத்திற்கு சேதாரமில்லாமல் துளசி எடுக்கும் முதிர்ச்சியான முடிவுடன் படம் நிறைவுறுகிறது.
கேரக்ட்டர்களாகவே வாழ்ந்திருந்த ரேவதி, ரோகிணி, ரவி
துளசியாக ரேவதி, முரளியாக ‘நிழல்கள்’ ரவி, கவிதாவாக ரோகிணி ஆகிய மூவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருந்தார்கள். அந்தந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றே சொல்லி விடலாம். ஆனால் மற்ற இருவரையும் அநாசயமாக ஓவர்டேக் செய்தது என்றால் அது ரேவதியின் சிறந்த நடிப்புதான். ஒரு சராசரிப் பெண்ணின் மனத்தவிப்பு, துயரம், தத்தளிப்பு, மகிழ்ச்சி என்று அத்தனை உணர்வுகளையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தினார். (உண்மையில் ரோகிணி நடித்த பாத்திரத்தில்தான் ரேவதி நடிக்க முதலில் விரும்பினாராம்! அந்த கேரக்ட்டரில்தான் நடிக்க அதிக ஸ்கோப் இருந்தது என்கிற வகையில் ரேவதியின் முடிவு புத்திசாலித்தனமானது).
சொந்த வீடு என்கிற எட்டாத கனவுடன், நடுத்தர வர்க்க நப்பாசையுடன் வாழும் ரேவதிக்கு, திடீர் என்று அந்தக் கனவு நிறைவேறியவுடன் அவர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே?! புது வீடு வாங்கிய மிடில் கிளாஸ் ஆசாமியின் சந்தோஷத்தை அச்சுப் பிசகாமல் நடிப்பில் கொண்டு வந்திருந்தார். இங்கு துவங்குகிற ரேவதியின் அட்டகாசம், படம் முடியும் வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது. கணவனின் விலகல் பற்றி ஆரம்பத்தில் சந்தேகமாக உணர்வது, அதைப் பற்றிய உண்மை தெரிந்தவுடன் அதிர்ச்சியடைவது, அழுகையில் வெடிப்பது. கணவனிடம் கெஞ்சுவது, கவிதாவிடம் ஆவேசமாக சண்டையிடுவது, ஒரு கட்டத்தில் தன்மானத்துடன் வெளியேறுவது, நட்பு ரீதியாக பழகும் ஆசாமியை முதிர்ச்சியுடன் கையாள்வது, கிளைமாக்ஸில் எடுக்கும் முடிவு என்று சராசரியும் காவியத்தன்மையும் கலந்த பாத்திரத்தை ரேவதி திறமையாக கையாண்டிருந்தார். இதனாலேயே ‘சிறந்த நடிகைக்கான’ விருதையும் பெற்றார். ‘துளசி’ என்கிற பாத்திரப் பெயரின் புனிதத்தன்மையை ரேவதி காப்பாற்றியிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ரோகிணி ஏற்றிருந்த பாத்திரம் சவாலானது. உளச்சிக்கல் கொண்டது. இந்தியில் ஸ்மிதா பாட்டீல் இதை அட்டகாசமாக கையாண்டிருந்தார். அதற்கு நிகராக ரோகிணியும் அசத்தியிருந்தார். முரளி திருமணமானவர் என்பதை அறிந்தும் கூட அவரை நேசிக்காமல் இவரால் இருக்க முடியவில்லை. விட்டுக்கொடுக்கவும் மனம் வருவதில்லை. ரேவதி போனில் கெஞ்சியும் கூட கல்மனதோடு இருப்பார். அது மட்டுமல்லாமல் முரளி மீதான பொஸஸிவ்னஸ்ஸை விபரீதமான முறையில் வெளிப்படுத்துவார். “நீ உன் மனைவியைத்தானே பார்த்துட்டு வரே.. உன் மேல அவ வாசனை வருது” என்று குதர்க்கமாக சந்தேகப்படுவார். இன்னொருபக்கம் குற்றவுணர்ச்சியிலும் தவிப்பார்.
தந்தை வயதில் இருக்கும் ஆண்களை மணம்புரியும் இளம்பெண்கள்
சில நடிகைகள் ஏன் தங்களை விட வயதானவர்களை, மணம் ஆனவர்களாகத் தேடி திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்கிற உளவியல் ரகசியம், இத்திரைப்படத்தின் வசனம் ஒன்றின் மூலம் சூசகமாக வெளிப்படுகிறது. “ஏம்மா.. தினமும் மாத்திரை எடுத்துக்கறல்ல.. அப்பப்ப டாக்டரை பார்க்கறல்ல” என்று போனில் விசாரிக்கும் அம்மாவிடம் “நீ ஒண்ணும் கவலைப்படாதம்மா… என் கூட முரளி இருக்கார். அப்பா பக்கத்துல இருக்கற மாதிரி பாதுகாப்பா இருக்கேன்” என்று சொல்வார் ரோகிணி. தன்னுடைய திருமண உறவு பற்றி நடிகை ஸ்ரீதேவி சொல்லும் போது ‘மறைந்த அப்பாவின் இடத்தின் பதிலீடாகத்தான் என் கணவரை பார்த்தேன்’ என்கிறார். இந்தப் படத்தின் சித்தரிப்பின்படி அப்பா இல்லாத ரோகிணி, முரளியை தந்தையின் பதிலீடாகத்தான் பார்க்கிறார். எனவேதான் அவர் திருமணமானவர் என்பது அறிந்தும் முரளியை கைவிட முடியவில்லை. ‘இந்த பொம்மைதான் வேணும்” என்று குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறார். அது கிடைக்காதோ என்று ஆத்திரப்பட்டு கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து வீசுகிறார். இந்தக் கேரக்ட்டரின் குணாதிசயத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதை தன்னுடைய நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார் ரோகிணி.

‘நிழல்கள்’ ரவியின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது. தன்னுடைய ‘ஆல்டர் ஈகோ’ கேரக்ட்டர் என்றாலும் இதை நேர்மையாக சித்தரித்திருந்தார் பாலுமகேந்திரா. பார்வையாளர்களால் வெறுக்கப்படும் பாத்திரம் என்றால் முன்னணி நடிகர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே நிழல்கள் ரவி, சரத்பாபு போன்றவர்கள்தான் ஏற்றாக வேண்டும். இரண்டு உறவுகளுக்கு இடையேயான தத்தளிப்பை ரவி பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
தளபதி, ரோஜா ஆகிய படங்களில் சிறு வேடத்தில் நடித்து முடித்திருந்த ஆரம்பக் கட்ட அர்விந்த்சுவாமிக்கு இதில் ரேவதிக்கு ஆதரவாக இருக்கிற நேர்மையான இளைஞனின் பாத்திரம். இதை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். ஆதரவற்ற நிலையில் இப்படியொரு உதவி செய்யும் நண்பன் அமைந்தால் நன்றாக இருக்குமே என்று ஒவ்வொரு பார்வையாளரும் நினைக்கும்படியான இனிமையான கேரக்ட்டர். ரேவதிக்கும் அர்விந்திற்கும் இடையில் இருப்பது நட்பு மட்டுமே என்றெல்லாம் திரைக்கதை பூசி மெழுகவில்லை. ஒரு கட்டத்தில் தனது காதலை நாகரிகமாக தெரிவிப்பார் அர்விந்த். அந்தச் சூழலை ரேவதி கையாளும் விதம் அத்தனை முதிர்ச்சியானதாக இருக்கும். தனது பிறந்த நாளில் விவாகரத்து பேப்பரை வைத்துக் கொண்டு துவண்டு நின்று கொண்டிருக்கும் ரேவதியிடம் “அது டிவோர்ஸ் பேப்பர்தான். உங்க டெத் சர்டிபிகேட் இல்லை’ என்று ஆறுதல் சொல்லி தேற்றுவார் அர்விந்த். இது போன்ற இடங்களில் வசனங்கள் இயல்பாகவும் ‘பளிச்’ என்றும் அமைந்திருந்தன.
வர்க்கம் மாறினாலும், மாறாத பெண்களின் பிரச்சினை
ரேவதி வீட்டின் விசுவாசமான பணியாளராக ‘பசி’ சத்யா தனது இயல்பான நடிப்பைத் தந்திருந்தார். ரேவதி, சத்யா ஆகிய இருவரும் பொருளாதார ரீதியாக வெவ்வேறு நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக ஒரே பிரச்சினையைத்தான் அனுபவிக்கிறார்கள். சத்யாவின் கணவன் ஒரு குடிகாரன். இன்னொரு பெண்ணோடு தொடர்பும் உண்டு. பணம் கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்துகிறான். “ஏன் இவனோட எல்லாம் குடும்பம் நடத்தற. அடிச்சு துரத்த வேண்டியதுதானே?’ என்று ஆரம்பத்தில் ரேவதி எளிதாக சொல்லி விடுவார். ஆனால் அவரே அந்தப் பிரச்சினையில் சிக்கும் போது அது எளிதான தீர்வாக அமைவதில்லை.
இன்னொரு குறிப்பிடத்தக்க பாத்திரமும் உண்டு. நிழல்கள் ரவியின் விசுவாச உதவி இயக்குநராக நடித்திருக்கும் சுரேஷ் சக்ரவர்த்திதான் அது. தொழில்ரீதியாக தனது குருநாதரின் மீது மரியாதையும் அன்பும் வைத்திருப்பார். பல நெருக்கடியிலும் உதவியாக நிற்பார். ஆனால் தன்னுடைய டைரக்டர், கட்டிய மனைவிக்கு துரோகம் செய்வதை மட்டும் அவரால் சகிக்க முடியாமல் கடைசியில் விலகி விடுவார். பாலுமகேந்திராவின் சில உறவுகள் குறித்து அவருடைய உதவி இயக்குநர்களுக்கு கடுமையான ஆட்சேபம் இருந்திருக்கிறது. இயக்குநர் பாலாவின் சுயசரிதைக் குறிப்பில் இது தொடர்பான விஷயங்களை வாசிக்க முடியும். இதையும் நேர்மையாக படத்தில் இணைத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

எப்போதும் ஜெயிக்கிற பாலுமகேந்திரா + இளையராஜா கூட்டணி
சில இயக்குநர்களோடு இணையும் போது மட்டும் இளையராஜாவின் இசையில் இனிமையும் துள்ளலும் கூடி விடும். அதிலும் பாலுமகேந்திரா என்றால் கூடுதல் ஸ்பெஷல். இந்தத் திரைப்படத்தின் பலமாக ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சொல்ல வேண்டும். இந்த ஆல்பத்தின் ஜனரஞ்சமான ‘ஹிட்’ பாடல் என்றால் அது ‘ஆசை அதிகம் வெச்சு’ என்கிற ஜானகி பாடிய துள்ளிசைப் பாடல். தனது பிரத்யேகமான பாணியில் இதை படமாக்கியிருந்தார் பாலுமகேந்திரா. (படத்தின் உள்ளே வரும் காட்சியில், “வெச்சிருக்கிற கேமிரா ஆங்கிள்ல எல்லாம் நீ விட்ட ஜொள்ளு தெரியுதே’”’ என்று சர்காஸ்டிக்காக சொல்வார் தயாரிப்பாளர்).
மற்ற இசையமைப்பாளர்களின் இசை என்றால் நம் காதுகள்தான் முதலில் அதை ஸ்பரிசிக்கின்றன. ஆனால் ராஜாவின் இசை என்றால் மட்டும் காதோடு சேர்ந்து மனதும் கூடவே ஸ்பரிசிக்க ஆரம்பித்து விடுகிறது. வாலி எழுதிய பாடல்கள் அனைத்துமே ஆத்மார்த்தமான உணர்வைத் தருபவையாக அமைந்திருந்தன. ‘எல்லோருக்கும் நல்ல காலம்’ என்று டைட்டிலில் ஜேசுதாஸ் குரலில் கேட்கும் பாடல் இதமான உணர்வைத் தரும். ரேவதி ஒருவருக்காக பிறந்த நாள் கொண்டாடும் அர்விந்த், அந்தச் சமயத்தில் பாடும் ‘நலம் வாழ.. எந்நாளும் என் வாழ்த்துகள்’ பாடல் அத்தனை இனிமையானது. தனது குரலின் மூலம் இதற்கு மேலும் சிறப்பு சேர்த்திருந்தார் எஸ்.பி.பி.

…கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது..
என்று வார்த்தைகளில் ஆறுதல் மருந்தை எக்ஸ்ட்ராவாக வைத்திருந்தார் வாலி. ‘எல்லோரும் சொல்லும் பாட்டு’ என்கிற இன்னொரு பாடலும் ஆத்மார்த்தமானது. ‘நல்லதோர் வீணை செய்தே’ என்கிற பாரதியார் பாடலுக்கு ஜானகியின் குரலில் உருக்கமானதொரு இசையைத் தந்திருந்தார் ராஜா. பாடல்களைப் போலவே பின்னணி இசையிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார். ரேவதியின் மகிழ்ச்சி, துயரம், ரோகிணியின் ஆங்காரம், துக்கம், நிழல்கள் ரவியின் தத்தளிப்பு, அர்விந்த்சுவாமியின் கருணை போன்றவற்றிற்கு பொருத்தமான இசையை அளித்து சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னமும் மேலே பயணிக்க வைத்தது ராஜாவின் இசை என்றால் அது மிகையாகாது.

ரேவதியின் முடிவு சரியானதா?
உணர்வுபூர்வமான காட்சிகளின் மூலம் இதன் திரைக்கதையை கச்சிதமான கோர்வையுடன் உருவாக்கியிருந்தார் பாலுமகேந்திரா. ஒரு கட்டம் வரைக்கும் தனது கணவனிடம் கெஞ்சி, பிறகு சுயமரியாதையுணர்வு பெருகியவுடன் ரேவதி விலகிச் சென்று தனியாளாக வாழப் போராடுவது பெண் இனத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது. காதலைச் சொல்லும் அர்விந்திடம் தனது குழப்பமான மனநிலையைச் சொல்வதும், திரும்பி வரும் நிழல்கள் ரவி “என்னை ஏத்துக்கோ’ என்று கேட்கும் போது “நான் இதே மாதிரி இன்னொருத்தனோட இருந்துட்டு வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்று ஆணித்தரமான கேள்வியை முன்வைப்பதும் இந்தக் கேரக்ட்டரின் மேன்மையை பதிவு செய்திருக்கிறது. துளசியின் வாழ்க்கையில் இனி யார்தான் இருப்பார்கள் என்கிற கேள்விக்கு சரியானதொரு காரணத்தை இறுதியில் தந்திருந்தார் இயக்குநர்.
ஆண் – பெண் உறவுச்சிக்கலின் வரலாறு என்பது நீண்ட நெடிய காலத்தைக் கொண்டது. பரஸ்பர மதிப்பு, அன்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், நேர்மை போன்றவைதான் இந்த உறவை நீடிக்க வைக்கும்.
அலைபாய்ந்து தடுமாறும் ஆண்கள், அந்த தடுமாற்றம் காரணமாக கையில் இருக்கும் துளசி செடியை தவற விட்டால் பிறகு அது அவர்களுக்கு நிரந்தரமாகவே கிடைக்காமல் போய் விடும்.
ரேவதி, ரோகிணி, நிழல்கள் ரவி, அர்விந்த்சுவாமி ஆகியோரின் சிறந்த நடிப்பு, ராஜாவின் அற்புதமான பாடல்கள் மற்றும் இசை, பாலுமகேந்திராவின் உணர்வுபூர்வமான இயக்கம் ஆகிய காரணங்களுக்காக மறுபடியும் மறுபடியும் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கிறது, இந்தத் திரைப்படம்.