கோவை:
கோவையில் விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக கான்ட்ராக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் அருகே உள்ள அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராட்சத பேனர் அமைக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் 7 கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று மாலை அப்பகுதியில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
திடீர் மழையை எதிர்பார்க்காத தொழிலாளர்கள், அப்படியே வேலையை நிறுத்திவிட்டு அங்கிருந்து கீழே இறங்க முற்பட்டனர். அப்போது பயங்கர வேகத்தில் காற்று வீசியதில் பேனர், அதன் கம்பிக் கட்டுமானத்துடன் சரிந்ததது. இதில் பேனருடன் சேர்ந்து 7 தொழிலாளர்களும் நிலைத்தடுமாறி கீழே விழ, அவர்கள் மீது அந்தக் கம்பி கட்டுமானம் விழுந்தது.
இதில் குமார், குணசேகரன், சேகர் ஆகிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கருத்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த விளம்பர பேனருக்கு ஒப்பந்தம் எடுத்திருந்த சேலத்தை சேர்ந்த சப் – கான்ட்ராக்டர் பழனிசாமியை போலீஸார் கைது செய்தனர்.