புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சான்டா குரூஸ் பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இதையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் நகரில் இந்தியர்களுடன் நேற்று கலந்துரையாடினார். ‘வெறுப்பு சந்தையில் அன்புக்கடை’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில் கூறியதாவது: நான் மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை தடுக்க மத்திய அரசு முழு பலத்தையும் பயன்படுத்தியது.
சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாங்கள் பாத யாத்திரை மேற்கொண்டோம். அப்படி நடந்து செல்லும் போதுதான், மக்களுடன் மக்களாக செல்வது அவ்வளவு சாதாரணமில்லை என்பதை தெரிந்து கொண்டோம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மக்களை மிரட்டுகிறது. அவர்களுக்கு எதிராக மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்துகிறது. அரசியலில் செயல்படுவது மிகவும் கடினமானதாக மாறிவிட்டது. அதனால்தான் இந்தியாவின் தெற்கு பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள நாங்கள் முடிவெடுத்தோம்.
இந்தியாவில் சில கும்பல்கள், தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்களுடன் நாங்கள் வளர்ந்து வந்தோம். அவற்றின் மீதுதான் தற்போது தாக்குதல் நடந்து வருகிறது. காந்திஜி, குருநானக்ஜி போன்றவர்கள் வாழ்ந்த இந்திய பாரம்பரியத்தில், ‘தனக்கு எல்லாம் தெரியும்’ என்று பறைசாற்றிக் கொள்ள கூடாது என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. ஆனால், ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நோயில் உள்ளனர். அவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். கடவுள் அருகில் நீங்கள் பிரதமர் மோடியை உட்கார வைத்தால், இந்த பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்று கடவுளுக்கே அவர் விளக்கம் தருவார்.
நான் பாத யாத்திரை மேற்கொண்ட போதுதான், ‘வெறுப்பு சந்தையில் அன்புக் கடை’ என்ற யோசனை என் மனதில் தோன்றியது. ‘பாரத் ஜோடோ’ என்பது இந்தியாவில் மட்டுமல்ல, ஒருவருக்கு ஒருவர் மதிக்க வேண்டும், ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் அதன் கருத்தாக இருக்கிறது. எனவே, குருநானக்ஜியுடன் ஒப்பிடும் போது நான் பெரிதாக எதையும் செய்யவில்லை. எனக்கு முன்பே குருநானக்ஜி மெக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளுக்கு யாத்திரை சென்றுள்ளார் என்று நான் படித்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி இருக்கிறார். அதேபோல் கர்நாடகாவில் பசவண்ணா, கேரளாவில் நாராயண் குரு உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களைப் போன்ற பல ஜாம்பவான்கள் இருந்துள்ளனர். இவ்வாறு பேசினார்.