கண்ணுார், கேரளாவில் கடந்த ஏப்ரலில், ஓடும் ரயிலில் மர்ம நபர் பயணியர் மீது தீ வைத்த நிலையில், கண்ணுார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ரயிலின் சில பெட்டிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், எலத்துார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஏப்., 9ம் தேதி சென்று கொண்டிருந்த ஆலப்புழா- – கண்ணுார் ரயிலில், பயணியர் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
இச்சம்பவத்தில் எட்டு பயணியர் காயமடைந்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால், பெண்ணுடன் இருந்த 2 வயது குழந்தை உட்பட மூன்று பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பயணியர் மீது தீ வைத்த புதுடில்லியைச் சேர்ந்த ஷாரூக் ஷைபி, 24, என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அதன் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கண்ணுார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே ரயிலின் பெட்டிகள் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தன.
பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், பல பெட்டிகள் எரிந்து முழுதும் தீக்கிரையாகின.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்பதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
விபத்து நடந்த பகுதியில், 300 அடி துாரத்தில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிபொருள் தொட்டி இருந்த நிலையில், தீ அங்கு பரவாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மர்ம நபர்
விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், தீப்பிடித்து எரிந்த பெட்டியின் அருகே மர்ம நபர் ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் சென்றது பதிவாகி உள்ளது.
இந்த நபர் ரயிலில் தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுஉள்ளது. இருப்பினும், தடயவியல் அறிக்கைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்ட ரயிலின் பெட்டியில் இச்சம்பவம் நடந்துள்ளதால், ரயில்வே போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ., உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன.
ரயில் பெட்டி எரிந்தது குறித்த விரிவான அறிக்கையை ரயில்வே துறையிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்