கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த, வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராமசாமி என்பவருக்குச் சொந்தமான இடம் இருக்கிறது. அந்த இடத்தில் இன்று மாலை ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கும் பணி நடந்துவந்தது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் இந்தப் பணிக்கான கான்ட்ராக்டை எடுத்து செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பணிக்காக சேலத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் கோவைக்கு வந்திருந்தனர்.
இதற்கிடையே பணியின்போது எதிர்பாராத வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்திருக்கிறது. அப்போது விளம்பர பேனருக்காகக் கட்டப்பட்டிருந்த சாரம் சரிந்து கீழே விழுந்து, விபத்துக்குள்ளானது. இதில் குமார், குணசேகரன், சேகர் ஆகிய மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலின்பேரில் கருமத்தம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்திருக்கின்றனர். மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரித்துவருகின்றனர்.
கான்ட்ராக்டர் பழனிசாமி தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடிவருவதாகவும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்தில் பேனர் அமைக்கப்பட்டதே, இந்த விபத்துக்குக் காரணம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.