குவாஹாட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் வன்முறை யால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மாவட்டங்களை நேற்று பார்வையிட்டார்.
பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மணிப்பூரில் இரு குழுவினருக்கு இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இதுவரை பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தெங்னோபால் மாவட்டத்தில் உள்ள எல்லை நகரமான மோரே மற்றும் காங்போக்பி மாவட்டத்தில் நேற்று பயணம் மேற்கொண்டு அங்குள்ள சமுதாய அமைப்புகளின் தலைவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, அமித் ஷாவை ஏராளமானானோர் வரவேற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோரே, மியான்மரின் எல்லையில் உள்ள மிகப்பழமையான சர்வதேச வர்த்தக நகரங்களில் ஒன்றாகும். இந்தியா-மியான்மர் நட்புறவு பாலம் இங்குதான் அமைந்துள்ளது. இந்த பாலம் இந்தியாவை மியான்மரின் சகாயிங் டிவிசனில் உள்ள கலேவாவுடன் இணைக்கிறது.
மணிப்பூரில் மைதேயி, குக்கி சமூகத்தினரை தவிர, தமிழர்கள், நேபாளர்கள், ராஜஸ்தானியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் உள்ளிட்ட பலர் எல்லை நகரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இனக்கலவரத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கானோர் எல்லை நகரத்தை விட்டு வெளியேறி மியான்மர் உட்பட பல பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு காக்சிங் மாவட்டத்தில் உள்ள சுக்னுவில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.