சென்னை: உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் இம்மாதம் வெளியாகிறது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இதில், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதேநேரம் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்கு உதயநிதி அழைத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினி நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதிக்கு நோ சொன்ன சூப்பர் ஸ்டார்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இம்மாதம் வெளியாகிறது. உதயநிதி உடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மாமன்னன் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ஏற்கனவே மாமன்னன் படத்தில் இருந்து ராசா கண்ணு, ஜிகு ஜிகு ரயில் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மாமன்னன் தான் உதயநிதியின் கடைசிப் படம் என்பதால், இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மேலும், இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இதனால், மாமன்னன் இசை வெளியீட்டு விழா அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில், மேலும் பல பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளனர். தனது கடைசிப் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால், உதயநிதியும் முக்கியமான நட்சத்திரங்களை அழைத்துள்ளாராம். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியையும் உதயநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி அழைப்புவிடுத்துள்ளார். ஆனால், ரஜினி விழாவுக்கு வரவில்லை என சொல்லிவிட்டதாக தெரிகிறது.
உதயநிதி தற்போது முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார், அதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதனால், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக அரசியல் பேச்சு இருக்கும் என ரஜினி கருதுகிறாராம். அரசியலுக்கு வருவேன் என சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிய ரஜினி, இப்போது தான் அரசியல் வாடை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
அதுமட்டும் இல்லாமல் அடுத்தடுத்து அவரது நடிப்பில் ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவையில்லாமல் பேசி அரசியல் கண்டெண்ட் எதும் கொடுத்துவிட்டால் பின்னர் அதுவே பிரச்சினையாகிவிடும் என்பதால் தான் ரஜினி கலந்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம் அரசியலில் இருக்கும் கமல், எதைப்பற்றியும் யோசிக்காமல் உதயநிதிக்கு ஓக்கே சொல்லிவிட்டாராம்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இணைய ரெடியாக காத்திருக்கிறார் கமல். அதனால், அவருக்கு மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் ரஜினிக்கு அது தலை வலியாக ஆகிவிடக் கூடாது என எச்சரிக்கையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ரஜினி பயந்தது சரிதான் என மாமன்னன் இசை வெளியீட்டு விழா செட் உறுதி செய்துள்ளது.
நேரு ஸ்டேடியத்தில் போடப்பட்டு வரும் மாமன்னன் இசை வெளியீட்டு விழா செட்டில், அரசியல் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், சட்ட மாமேதை அம்பேத்கர், கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் அவர்களது பொன்மொழிகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றைய மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பல சர்ப்ரைஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.