புதுடெல்லி: தனியார் தொலைக்காட்சி சார்பில் தலைநகர் டெல்லியில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வனப் பகுதியின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு திட்டங்களால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தரமான சாலை, ரயில் பாதைகள் அவசியம். அதேநேரம் வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனப்பகுதிகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் கைகோத்து செல்வது அவசியம். அந்த வகையில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியின் சமநிலை பேணப்பட்டிருக்கிறது.
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க விவசாய கழிவுகளை எரிக்க கூடாது என்பதற்காக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது டெல்லியில் காற்றுமாசு சற்று குறைந்திருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு மத்திய அமைச்சர் பூபேந்திர் யாதவ் தெரிவித்தார்.