சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில், சதிஷ் உட்பட 9 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார், பானுமதி, நடேசன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த மோகனா, மணிமேகலை, வசந்தா, பிரபாகரன், மகேஸ்வரி, பிருந்தா ஆகிய ஆறு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சிகிச்சையில் உள்ள ஆறு பேருக்கும் 30 முதல் 60 சதவீதம் வரை தீக்காய பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேரும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அப்போது ஜே.எம் 2 மேஜிஸ்திரேட் சிகிச்சையில் உள்ள நபர்களிடம் வாக்குமூலம் பெற்றார். பின்னர் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதனிடையே மருத்துவமனையின் முன்பாக உறவினர்கள் கதறி அழும் காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க செய்தது. மேலும் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து தடவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடத்தினர். விபத்து தொடர்பாக இரும்பாலை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் அறிவித்துள்ளார்.