ராஞ்சி: மத்திய பாஜக அரசின் டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேச உள்ளார்.
டெல்லி அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் குறித்த அதிகாரம் யாருக்கு என்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய பாஜக அரசுக்கும் இடையே யுத்தம் நடந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றமானது, அதிகாரிகள் நியமனம் -மாறுதல் தொடர்பான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் உண்டு என தெள்ளத் தெளிவாக தீர்ப்பளித்தது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பெருந்தோல்வியாகும்.
ஆனால் மத்திய பாஜக அரசோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே செல்லுபடியாகாமல் செய்வதற்காக ஒரு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அதாவது டெல்லி அதிகாரிகள் நியமனம் -மாறுதல் அதிகாரம் மத்திய அரசுக்குதான் என்கிறது இந்த அவசர சட்டம். இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.
மத்திய பாஜக அரசு அவசர சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது; இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இதற்கான மசோதாவை நிறைவேற்றியாக வேண்டும். லோக்சபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் எளிதாக இது தொடர்பான மசோதா நிறைவேறிவிடும். ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை; எதிர்க்கட்சிகளின் தயவுடனேயே இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும். அதனால் ராஜ்யசபாவில் இந்த மசோதாவை எப்படியாவது தோற்கடிக்க செய்ய வேண்டும் என களமிறங்கி உள்ளார் கெஜ்ரிவால்.
ராஜ்யசபாவில் பாஜக அரசின் இம்மசோதாவை தோற்கடிப்பது தொடர்பாக ஒவ்வொரு மாநிலமாக சென்று பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மாநிலங்களின் முதல்வர்களை கெஜ்ரிவால் சந்தித்து பேசி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் இச்சந்திப்பில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவே ஜார்க்கண்ட் மாநில ராஞ்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் வருகை தந்தனர். இன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கெஜ்ரிவால் சந்தித்து பேச உள்ளார். இச்சந்திப்பில் பாஜக அரசின் மசோதாவை ராஜ்யசபாவில் தோற்கடிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உதவ வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்த உள்ளார்.