மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வை வளர்த்ததில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே முக்கிய பங்கு வகித்தார். அவரின் மகள் பங்கஜா முண்டே கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தனது பெரியப்பா மகன் தனஞ்சே முண்டேயிடம் தோல்வி அடைந்தார். இதனால் மகாராஷ்டிரா அமைச்சரவையில் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதோடு சட்டமேலவை தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் பங்கஜா முண்டே கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. மேலும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் வேறு கட்சியில் பங்கஜா சேரப்போவதாகவும் செய்தி வெளியானது.
சமீபத்தில் கட்சி தலைவர் ஜே.பி.நட்டா மும்பை வந்திருந்த போது நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கஜா முண்டே கலந்து கொண்டார். அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பங்கஜா முண்டே தனது அதிருப்தியை வெளிப்படுத்த தயங்குவதில்லை. தற்போது கட்சியின் தேசிய செயலாளராக இருக்கும் பங்கஜா முண்டே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “நான் பா.ஜ.க.வை சேர்ந்தவள்தான். ஆனால் பா.ஜ.க எனது கட்சி கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பா.ஜ.க. மிகப்பெரிய கட்சி. அது என்னுடைய கட்சி கிடையாது. நான் பா.ஜ.க-வை சேர்ந்தவள். எனது தந்தையுடன் பிரச்னை என்றால் எனது சகோதரன் வீட்டிற்கு செல்வேன்” என்று குறிப்பிட்டார். அவர் தனது சகோதரன் என்று குறிப்பிடுவது மகாதேவ் ஜன்கர் தலைமையிலான ராஷ்ட்டீரிய சமாஜ் பக்ஷ கட்சி என்கிறார்கள். கோபிநாத் முண்டே குடும்பத்திற்கு மகாதேவ் ஜன்கர் மிகவும் நெருக்கமானவர். பங்கஜா-வுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது குறித்து மகாதேவ் ஜன்கர் அளித்த பேட்டியில், “பங்கஜாவின் கட்சி ரிமோட் கண்ட்ரோல் வேறு ஒரு இடத்தில் இருப்பதால் அக்கட்சியால் நமது சமுதாயத்திற்கு எந்த வித பயனும் இல்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பங்கஜா மட்டுமல்லாது அவரது சகோதரி ப்ரிதம் முண்டேயும்(Pritam Munde) முதல் முறையாக கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக போராடி வரும் மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக ப்ரிதம் முண்டே கருத்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க எம்.பி.யான ப்ரிதம் முண்டே பீட் என்ற இடத்தில் அளித்த பேட்டியில், “எந்த பெண் புகார் கொடுத்தாலும் அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு விசாரிக்கவேண்டும். அதனை புறம் தள்ளிவிடக்கூடாது.
மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அதேசமயம் முழுமையாக விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்தார் என்று தெரிவித்தார். மல்யுத்த வீராங்கணைகளுக்கு வெளிப்படையாக ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி.ப்ரிதம் என்பது குறிப்பிடத்தக்கது.