லண்டன்,
இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி. இங்கிலாந்தின் வேகப்பந்து வீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. தேனீர் இடைவேளைக்கு பிறகு அந்த அணி முதல் இன்னிங்சில் 56.2 ஓவர்களில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஜேம்ஸ் மெக்கோலும் 36 ரன்னும், கர்டிஸ் கேம்பெர் 33 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது இது 20-வது முறையாகும். ஜாக் லீச் 3 விக்கெட்டும், மேத்யூ போட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 16 ஓவர் முடிந்திருந்த போது விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஜாக் கிராவ்லி 47 ரன்களுடனும், பென் டக்கெட் 51 ரன்களுடனும் களத்தில் ஆடிக்கொண்டிருந்தனர்.