கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டின் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பம் எனும் சிறு கிராமத்தில்தான் 12 ஆண்டுகளாக 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கோவில் திருவிழாவில் மோதிக் கொண்ட இரு சமூகங்கள் இப்போது எப்படியாவது 144 தடை உத்தரவை நீக்குங்கள் என கோருகின்றனர்.
ஊருன்னு இருந்தா கோவில் இருக்கும்.. கோவில்னு இருந்தா விழான்னு இருக்கும்.. விழான்னு இருந்தா தகராறு வரத்தான் செய்யும்.. இது ஏதோ சினிமா பட வசனம் மட்டுமல்ல.. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பட்டி தொட்டி எங்கும் இதுதான் நிலைமை. ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி ஒரு திருவிழாவை நடத்த தீர்மானிப்பர்; ஊர் இளந்தாரிகளோ ஜென்மத்துக்கும் ஊரையே ஒன்று கூடவிடாமல் முட்டி மோதி பரம்பரை பகையாக வளர்த்துவிடுவர். இது காலந்தோறும் தமிழ்நாட்டு கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பம் என்கிற சிறு கிராமம் மட்டும் என்ன மேலே சொன்ன தமிழ்நாட்டின் அடிப்படை வாழ்வியலுக்கு விதிவிலக்காகிவிட முடியுமா என்ன? பாண்டியன்குப்பம் சோலையம்மன்- மாரியம்மன் கோவில் திருவிழா 2012-ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் தலித் மக்கள் தங்களுடன் இணைந்து சாமி கும்பிட அனுமதிக்க முடியாது என பிற்படுத்தப்பட்ட ஜாதி குரல் கொடுத்தது. இதனால் இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்தது. அத்துடன் போலீசாரும் குவிக்கப்பட்டனர்; வருவாய்துறையும் களமிறங்கியது. அன்று பிறப்பிக்கப்பட்டதுதான் 144 தடை உத்தரவு. இன்னமும் பாண்டியன்குப்பம் கிராமத்தில் அதாவது சுமார் 12 ஆண்டுகளாக இந்த 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
மேலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் கிராம சபை கூட்டங்களை கூட்ட முடியாது; நலத் திட்ட உதவி நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாது என்கிற நிலைமைதான். பாண்டியன்குப்பம் உள்ளாட்சித் தேர்தலில் தலைவராக சண்முகம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நாங்கள் சமாதானமாக செல்கிறோம்; எங்கள் ஊரின் 144 தடை உத்தரவை எப்படியாவது நீக்கிவிடுங்கள் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்திடம் இக்கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மன்றாடி வருகின்றனர். இதன் முதல் கட்டமாக கடந்த மே 1-ந் தேதி இந்த கிராமத்தில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அதாவது 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு முன்னர் முறைத்து முட்டி மோதிய தரப்புகள் சமாதானமாக கை குலுக்கிக் கொண்டு இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்தாவது 12 ஆண்டுகால 144 தடை உத்தரவு முடிவுக்கு வரும் என்கிற பெரும் நம்பிக்கையில் உள்ளனர் பாண்டியன்குப்பம் கிராம மக்கள்.