கவிதை மொழியில் இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

இந்திய திரையுலகின் அடையாளங்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து இசையுலகில் ராஜாவாக வலம் வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 7 ஆயித்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்நிலையில் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கியும் தனது அன்பை வெளிப்படுத்தினார் முதல்வர் முக ஸ்டாலின். மூத்த அமைச்சர்கள், கே.என்.நேரு, பொன்முடி ஆகியோரும் இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்திலும் கவிதை மொழியில் இளையராஜாவுக்கு கலக்கலாய் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

டிவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது,

“காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா!

அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!

அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை ‘இசைஞானி’ எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.

இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக – உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.

எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் முக ஸ்டாலினின் இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் இசைஞானி இளையராஜாவின் பெருமைகளை கூறி வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.