புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பாஜக அரசும் பிரதமரும் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
“நரேந்திர மோடி ஜி இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நாட்டுக்குச் சொல்லுங்கள்” என்று பிரிஜ் பூஷண் சிங்-க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் ஆங்கில செய்தித்தாளின் அறிக்கையைப் பகிர்ந்து பிரியங்கா காந்தி வத்ரா பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நரேந்திர மோடி இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை படித்துவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏன் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நாட்டிற்குச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே செய்தி அறிக்கையை பகிர்ந்துள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி,”நாட்டின் பிரதமர் ஏன் அந்த மனிதனைத் தொடர்ந்து பாதுகாக்கிறார். நாட்டின் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் அந்த மனிதனுக்கா மவுனம் காக்கிறார். அந்த மனிதனுக்காக நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் கண்களை மூடிக்கொள்கிறார். அந்த மனிதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் தொடர்ந்து தாமதம் செய்துவருகிறது. அந்த மனிதனை ஏன் அரசாங்கமும் பாஜகவும் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது?. ஏதாவது பதில் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.