சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் 25 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் (‘கலைஞர் Convention Centre’) அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” பாலர் இல்லமாக இருந்த இந்த இடத்தை தலைவர் கருணாநிதியால் கலைவாணர் அரங்கமாக ஆக்கப்பட்டு, அந்த கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு இலச்சினை, அதாவது லோகோ வெளியீட்டு விழாவிற்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் நம்முடைய பெருமதிப்புற்கும் மரியாதைக்கும் உரிய கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கை வாரிசான தலைவர் கருணாநிதியை வாழ்த்துவதற்காக மகாத்மா காந்தியின் பேரன் இங்கே வருகை தந்திருக்கிறார்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக நாங்கள் இருந்தாலும், அண்ணல் காந்தியடிகளுக்கும் எங்கள் இயக்கத்துக்குமான தொடர்பை மரியாதைக்குரிய கோபாலகிருஷ்ணன் காந்தி நன்கு அறிவார். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் இயக்கத்தில் அண்ணல் காந்தியடிகளின் தொண்டராகத்தான் இருந்தார். கதராடை உடுத்தினார். கதர்த் துணிகளோடு நாடு முழுவதும் சுற்றினார். கள்ளுக்கடை மறியல் நடத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். வகுப்புரிமையைக் காக்க தனி இயக்கம் தேவை என்பதால் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் தந்தை பெரியார்.
மதவெறியன் கோட்ஸே-வால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, தந்தை பெரியார் அடைந்த வேதனை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. “இருந்த காந்தி, காந்தி! இறந்த காந்தி, எங்கள் காந்தி!” என்றார். அதே போல் பேரறிஞர் அண்ணாவும், அண்ணல் காந்தியடிகள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்கள். ‘உலகப் பெரியார் காந்தி’ என்ற தலைப்பில் 1948-ஆம் ஆண்டு ஒரு புத்தகம் எழுதினார் பேரறிஞர் அண்ணா. அண்ணல் காந்தி கொல்லப்பட்ட போது, “காந்தியாரின் புகழொளியை அல்ல, அவரது உழைத்து அலுத்த உடலைத்தான் வெறியன் சுட்டு வீழ்த்தினான்” – என்று தனது ‘திராவிட நாடு’ இதழில் எழுதினார்.
அந்த வரிசையில்தான் கருணாநிதியும், அண்ணல் காந்தியடிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். நாங்கள் எப்படி அண்ணல் காந்தியடிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோமோ, அதைப் போல தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கருணாநிதி – திராவிட இயக்கம் மீது மதிப்பு கொண்டவர் தான் நம்முடைய கோபாலகிருஷ்ணன் அவர்கள்.
‘திராவிடக் கப்பல் சென்றடைய வேண்டியது கூட்டாட்சித் துறைமுகம்’ என்றும் சொன்னார். ‘தந்தை பெரியாரின் இலட்சிய அரசியலை, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் செல்வாக்கு, ஆட்சிப்பீடத்தில் அமர்த்தியது’ என்றும் எழுதியவர் கோபாலகிருஷ்ணன் காந்தி. மேலும், ‘பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அரசியல் என்பது ஏழைகளுக்கு ஆதரவான, உழவர்களுக்கு ஆதரவான, சாமானிய மக்களுக்கு ஆதரவான, சாதியத்துக்கு எதிரான, மதவாதத்துக்கு எதிரான கொள்கைகளின் வழியே ஆட்சியதிகாரத்தை அணுகுவது’ என்றும் எழுதியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கிய போது அதனை கோபாலகிருஷ்ணன் காந்தி மனந்திறந்து பாராட்டினார். அண்ணல் காந்தியடிகளின் பேரனான அவர் இங்கு வருகை தந்து, கருணாநிதியையும், எங்களது ஆட்சியையும் பாராட்டிப் பேசியது எனக்கு வாழ்நாளில் கிடைத்தற்கரிய மாபெரும் பேறு! இந்த பெயரைக் காப்பாற்றும் வகையில் நான் நடந்து கொள்வேன் என்று மரியாதைக்குரிய கோபாலகிருஷ்ணன் காந்திக்கு நான் உறுதி அளிக்கிறேன்.
நாளை ஜூன் 3-ஆம் நாள்! வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு விடிவெள்ளியாய்த் தோன்றி – வாழும் காலத்தில் ஒளிதரும் உதயசூரியனாக வாழ்ந்து – நிறைந்த பின்பும் கலங்கரை விளக்கமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிற கருணாநிதி தோன்றிய நாள். அவரது பிறந்த நாள் என்பதைவிட, தமிழ்ச் சமுதாயத்திற்கு உயிராக – உணர்வாக இருந்தவர் – உதயமான நாள் என்றே சொல்ல வேண்டும்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு ஓராண்டு காலம் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. ஏனென்றால், அவர்களே தமிழ்நாடு அரசு ஆவார். என் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசையே அவருக்கும் அவரது புகழுக்கும் நான் காணிக்கை ஆக்குகிறேன். இந்த நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் தலைவர் கருணாநிதி தான். அவர் தொடாத துறையும் இல்லை – தொட்டுத் துலங்காத துறையும் இல்லை என்ற வகையில் அனைத்துத் துறையிலும் முத்திரை பதித்தவர்.
அவர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் அனைத்துத் துறைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுநலனும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அரசாங்கத்தைக் கருணாநிதி நடத்தினார். அதனால்தான் ஐந்து முறை இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
விடுதலை இந்தியாவில் நடந்த 13 சட்டமன்றத் தேர்தலில் நின்று – வென்று காட்டிய வெற்றி வீரராக அவர் இருந்ததற்கு இதுதான் காரணம் – மக்களோடு மக்களாக இருந்ததுதான். அவர் மக்களின் மனங்களில் என்றும் ஆட்சி செய்கிறார், இன்றும் வாழ்கிறார் கருணாநிதி. இலக்கியவாதிகளுக்கு எல்லாம் இலக்கியவாதியாக – கவிஞர்களுக்கு எல்லாம் கவிஞராக – அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக – முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதல்வராகத் திகழ்ந்த கருணாநிதி நற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதுகுறித்த இலச்சினையை (லோகோ) வெளியிட்டு இருக்கிறோம்.
கருணாநிதி பெயரால் மாபெரும் நூலகம் மதுரையில் அமைய இருக்கிறது. சென்னையில் அவரது நூற்றாண்டு நினைவு மருத்துவமனை அமைய இருக்கிறது. அரசின் சார்பில் மாதம்தோறும் – மாவட்டம்தோறும் விழாக்களை நடத்த இருக்கிறோம். இவை புகழ்பாடும் விழாக்களாக மட்டுமல்ல – கருணாநிதி இந்த தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை விளக்கும் விழாக்களாக இது அமைய இருக்கின்றன. பயன்பெற்றோர் பங்கேற்கும் விழாக்களாக அது அமைய இருக்கின்றன.
கடந்த ஐம்பது ஆண்டுகால தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் அடித்தளம் அமைத்தவர் தலைவர் கருணாநிதி. தொலைநோக்குப் பார்வையும் மிகச் சரியான திட்டமிடுதலும் மக்கள் மீது உண்மையான பற்றும் கொண்ட தலைவரால்தான் இப்படிச் செயல்பட முடியும் என்பதை கருணாநிதி மெய்ப்பித்துக் காட்டினார்கள்.
அவர் உருவாக்கிய பள்ளிகள் – கல்லூரிகள் – நிறுவனங்கள் – தொழிற்சாலைகள் – நகரங்கள் – மிகப்பெரிய வளர்ச்சியைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அவரால் பள்ளிப்படிப்பை படித்தவர்கள் – கல்லூரிக் கல்வியைத் தொட்டவர்கள் – பொருளாதார விடுதலை அடைந்த மகளிர் – வேலைவாய்ப்பைப் பெற்ற அரசு ஊழியர்கள் – பணியாற்ற இடம் பெற்ற தொழிலாளர்கள் – இப்படி கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்க்கையோடு தொடர்புடையவர் நம்முடைய தலைவர் கருணாநிதி.
இன்றைய சென்னையிலும், சென்னையைச் சுற்றியிருக்கக்கூடிய திருவள்ளூர் – காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்தளவுக்கு தொழில் நிறுவனங்கள் உதயமாகி இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் கருணாநிதி ஆட்சிக்காலம் தான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோன்ற தொழில் புரட்சியைத்தான் இன்று நமது திராவிட மாடல் அரசும் உருவாக்கி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளேன். 3233 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கிறது.
வருகிற ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறோம். அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர், ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டின் மீதும் திராவிட முன்னேற்றக் கழக அரசு மீதும் அவர்கள் வைத்திருக்கக்கூடிய மதிப்பையும் மரியாதையையும் அப்போது நான் அறிந்து கொண்டேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் சிங்கப்பூர், ஜப்பான் தொழில் நிறுவனங்கள் அறிந்து வைத்திருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்யும் போது நிச்சயமாக தமிழ்நாட்டில் தான் எங்களது நிறுவனங்களைத் தொடங்குவோம் என்று அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், தலைவர் கருணாநிதி போட்டுக் கொடுத்த அடித்தளம் தான்.
சிங்கப்பூர் மக்களிடத்திலே, தமிழர்களிடத்திலே நான் உரையாற்றும் போது கருணாநிதியின் பெயரைச் சொன்னாலே கைதட்டுகிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகெங்கும் வாழக்கூடிய தமிழினத்தின் தலைவராக கருணாநிதி செயல்பட்டார் என்பதை அவர்கள் பெருமிதத்தோடு சொல்கிறார்கள். அதனால்தான் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடே கொண்டாட இருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாட இருக்கிறார்கள்.
கருணாநிதி நூற்றாண்டு விழாக்களை முன்னெடுக்க அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் விரைவில் அமைக்கப்படும், இரண்டொரு நாட்களில் அது வெளியிடப்படும். அந்தக் குழுக்கள் கருணாநிதியின் பன்முக ஆற்றலால் நிகழ்த்தப்பட்டிருக்கக்கூடிய சாதனைகள், மக்கள் பணிகளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இந்த ஆண்டு முழுவதும் தமிழ்நாடு முழுக்க மிகச் சிறப்பான வகையில் எழுச்சியோடு நடத்தப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் அறிவிக்கிறேன்.
தலைவர் கருணாநிதி என்பவர் தனிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்து அல்ல; தமிழ்நாட்டின் சொத்து! உலகத் தமிழர்களின் சொத்து! தலைவர் கருணாநிதிக்கு மாபெரும் கனவு இருந்தது – உலகில் தலைசிறந்தவர்களாக தமிழர்கள் வலம் வர வேண்டும் என்று அவர் நினைத்தார். அதைப் போலவே, உலகத்தவர் அனைவரும் வலம் வரும் இடமாக தமிழ்நாட்டை ஆக்கிக் காட்ட வேண்டும் என்றும் நினைத்தார்.
இந்தியாவில் எந்த மாநிலமும் முன்னெடுக்காத போது, 1997-ஆம் ஆண்டே டைடல் பார்க்கை உருவாக்கி தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. அந்தத் துறையில் தமிழ்நாடு மாபெரும் சாதனையை நிகழ்த்துவதற்கும் – உலக நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கும் வாசலைத் திறந்து வைத்தது கருணாநிதி உருவாக்கிய அந்த டைடல் பார்க்தான்.
அந்த வகையில் – நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடங்குவதை ஒட்டி அவருக்கு, அவருடைய புகழுக்கு மேலும் மேலும் புகழ் சேர்க்கும் வகையில், ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.
தலைநகர் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். உலகளவில் உள்ள கூட்ட அரங்கங்களில் மகத்தான “BEST IN CLASS” Convention Center-ஆக இது அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
உலகளாவிய தொழில் கண்காட்சிகள் – வர்த்தக மாநாடுகள் – தொழில்நுட்பக் கூட்டங்கள் – உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் – உலகத் திரைப்பட விழாக்கள் – போன்றவை நடக்கும் இடமாகக் ‘கலைஞர் Convention Centre’ அமைய வேண்டும் என எண்ணுகிறேன். இது, சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின்போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்!
மிகப்பெரிய Convention Centre-கள் உலகின் பல நாடுகளில் இருப்பதுபோல தமிழ்நாட்டில் – சென்னையில் இருக்கிறது – அதுவும் கருணாநிதி பெயரால் இருக்கிறது என்பதுதான் மாபெரும் பெருமையாக இருக்கும். Convention Centre போன்ற பயன்பாட்டுச் சின்னங்கள் கருணாநிதி புகழை நூற்றாண்டுகள் கடந்தும் – உலகமெங்கும் எடுத்துச் செல்லும்.
ஏற்கெனவே, தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், கூடுதலாக கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் சுமார் 12 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அது இருந்தாலும், இது வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு அமையவுள்ள இந்த ‘கலைஞர் Convention Centre’ சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய – உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் – ஆகியவற்றை உள்ளடக்கி மிகப்பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னையில் அமைக்கப்படும் என்பதை பெருமையோடும் – மகிழ்ச்சியோடும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கலைஞர் convention centre’ என்பது தமிழ்நாட்டு இளைய சக்தியை – அறிவு சக்தியை பூமிப்பந்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக அமையும். ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாகப் பயிற்சி பெற்று வரும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களுடைய, இளைஞர்களுடைய அறிவுக்குடியிருப்பாக ‘கலைஞர் convention centre’ அமையுமானால் காலமெல்லாம் கருணாநிதி வாழ்வார்! அதுவே நம்மை ஆளாக்கிய தலைவருக்கு நாம் செய்யக்கூடிய சிறப்பான, உண்மையான புகழாக இருக்கும்.
கருணாநிதியின் முகம்தான் நமது இலச்சினை! கருணாநிதியின் கொள்கைகள்தான் நமது இலட்சியங்கள்! கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்றுவதுதான் நமது வாழ்நாள் கடமை என்பதைச் சொல்லி கருணாநிதியின் புகழ் இன்னும் பல நூறாண்டுகள் கடந்து, வாழ்க, வாழ்க, வாழ்க.” இவ்வாறு முதல்வர் பேசினார்.