பெங்களூர்: 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ50,000 கோடி செலவாகும் எனவும் கர்நாடகா அமைச்சரவை மதிப்பீடு செய்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்வதற்கும் இந்த தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாகுறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரஸின் வாக்குறுதி.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்றனர்.
முதல்வராகப் பதவியேற்ற சித்தராமையா, 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார். இருந்தபோதும் இந்த வாக்குறுதிகள் உடனடியாக அமலுக்கு வரவில்லை. இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது. இந்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற சுமார் ரூ65,000 கோடி நிதி தேவை. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் விமர்சித்த போது, ரூ3 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மாநிலத்துக்கு ரூ65,000 கோடி பெரிய சுமை இல்லை என்றார் முதல்வர் சித்தராமையா. இருப்பினும் 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் சித்தராமையா அரசு தடுமாறி வருகிறது என்கிற விமர்சனங்கள் தொடரவே செய்தன.
இந்த பின்னணியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தி 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இத்திட்டங்களை செயல்படுத்த ரூ50,000 கோடி செலவாகும் எனவும் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் மதிப்பீடு செய்துள்ளது.