வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
காளி மிகவும் பிரபலமான பெண் தெய்வம். தீய சக்திகளை அழிக்கத் தோன்றியவர், அன்னை பராசக்தியின் அவதாரமாக புராணங்கள் கூறுகின்றன. காளி வழிபாடு மனதை நல்வழியில் பயணிக்கத் தூண்டும். கெட்ட எண்ணங்களை அறவே ஒழித்துவிடும்.
“யாதுமாகி நின்றாய் -காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் -காளி
தெய்வலீலை யன்றோ…”
காளி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாகவும், நன்மை தீமை எல்லாம் அவளின் லீலைகள் தான் என்று பாரதி போற்றிப் பாடுகிறார்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி வரவு பற்றி பாண்டிய மன்னனுக்கு வாயிற்காவலன்
“அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி”
என்று சொன்ன போது காளி இலக்கியங்களில் இடம்பெற்றதை
அறியலாம். மேலும் அகநானூறு, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றிலும் காளி தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன.
தீய சக்தியை ஒழிப்பவள் பத்ரகாளி என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக ‘மகரிஷி’ அவர்கள் ‘பத்ரகாளி’ என்ற பெயரில் ஒரு நாவலை எழுதியுள்ளார். 1970 களில் அது திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளது அம்பகரத்தூர். இங்கே புகழ்பெற்ற பத்ரகாளி ஆலயம் ஒன்று உள்ளது. வட இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது தலமாக இது உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இங்கு திருவிழா நடக்கும். மகிஷாசுரன் சம்ஹார நினைவு வைபவம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வருவார்கள். தமிழக எல்லையில் அமைந்துள்ள இத்தலம் பேரளம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆண்டு திருவிழா 22-05-2023 அன்று தொடங்கி 30-05-2023 அன்று முடிந்தது..
அம்பர் மாகாளத்தில் அம்பன், அம்பராசுரன் என்ற இரண்டு அசுர குமாரர்கள் இருந்தார்கள். அவர்கள் மக்களை துன்பப்படுத்தி அதில் அளவற்ற இன்பம் கண்டு வந்தனர். அனைவரும் சிவபெருமானை வணங்கி காத்தருள வேண்டிக்கொண்டனர். அம்பிகையின் திருவருளால் அம்பராசுரனை அம்பன் கொன்று விட்டான். பின்னர் அவன் தேவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க உடனே காளியாக மாறி அம்பனை விரட்டுகிறாள். ஓடிக்கொண்டு இருக்கும் போது அந்த அசுரன் கிடாமங்கலம் என்று ஊரில் எருமை கிடாவாக மாறுகிறான். அம்பகரத்தூரில் தான் அவன் காளியால் சம்ஹாரம் செய்யப் படுகிறான். இக்கோயிலின் தல வரலாறு இதுதான்.
அரக்கனை சம்ஹாரம் செய்த உடன் காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு இரண்டு அசுர முகமானது தலையில் ஒன்றும் காதில் ஒன்றும் தோன்றி விடுகிறது. இதனால் எம்பெருமானிடம் சென்று முறையிட்டுகிறாள். அவர் உபதேசித்தப்படி அம்பகரத்தூரில் இருந்து கோவில் திருமாகாளம் சென்று தனது திருக்கரங்களால் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்.
காளி சிவபூஜை செய்த நிகழ்வு கோவில் திருமாகாளம் கோவிலில் சோம யாக உற்சவம் நடந்து முடிந்த இரண்டாம் நாள் நடைபெறும். அம்பகரத்தூர் காளி கோயில் திருவிழாவும் சோமயாக திருவிழாவும் வைகாசி மாதத்தில் ஒன்றாக வரும். காளியை வணங்குவோம் துன்பங்களில் இருந்து விடுபடுவோம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.