கர்நாடகாவில் விழுந்த அடி.. தவறை திருத்தும் பாஜக! ராஜஸ்தானில் மோடி ‛பக்கா மூவ்’! அப்போ காங்கிரஸ்?

ஜெய்ப்பூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் அங்கு செய்த மிக முக்கியமான தவறை இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் திருத்தி கொள்ளும் வகையில் பாஜக பணியை தொடங்கி உள்ளது. இதற்கு பிரதமர் மோடியை பிள்ளையார் சுழி போட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் தான் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மோதல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

இதற்கிடையே தான் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையேயான மோதலை நன்றாக பயன்படுத்தி கொண்டு ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக கட்சி செயல்பட்டு வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும், சமீபத்தில நடந்த கர்நாடகா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்ததாலும் ராஜஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றி செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய முனைப்பில் பாஜக உள்ளது.

இந்நிலையில் தான் பாஜக மேலிடம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் கர்நாடகா தேர்தலில் செய்த தவறை தப்பி தவறி கூட ராஜஸ்தானில் செய்து விடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவின் சீனியர் தலைவர்களை மேலிடம் புறக்கணித்தது. எடியூரப்பாவிடம் முதல்வர் பதவியை பறித்தது, ஈஸ்வரப்பாவுக்கு டிக்கெட் வழங்காமல் புறக்கணித்தது, ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது. மேலும் மூத்த அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் இருந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுதான் கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வியடைய மிகவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் செய்த தவறை ராஜஸ்தானில் செய்து விடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதன்படி தான் பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தராஜே மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளார். சமீபகாலமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த இவரை பாஜக மேலிடம் பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வந்தது. மேலும் பிரதமர் மோடியின் அருகே அவர் அமர வைக்கப்பட்டார்.

மத்திய பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் அதுபற்றிய சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் அஜ்மீரில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தான் வசுந்தரராஜே அழைத்து வரப்பட்டார். மேலும் பிரதமர் மோடியின் அருகே அவர் அமர்ந்திருந்தார். அவரும், பிரதமர் மோடியும் அடிக்கடி பேசி கொண்டனர். ராஜஸ்தானில் பாஜகவுக்கு இருக்கும் பெண் தலைவர் இவர் மட்டுமே. இந்நிலையில் தான் தற்போது அவரை சமாதானம் செய்யும் நோக்கத்தில் இந்த மேடையை பிரதமர் மோடி பயன்படுத்தி உள்ளார்.

2019ல் பாஜக மாநில தலைவராக ஆம்பர் எம்எல்ஏ சதீஷ் பூனியா நியமிக்கப்பட்ட நிலையில் வசுந்தரராஜே அதிருப்தியடைந்தார். இதையடுத்து அவர் கட்சி நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்தார். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சித்தோர்கர் எம்பியான ஜோஷி மாநில தலைவராக தேர்வு செ்யப்பட்டார். அதன்பிறகும் கூட ராஜஸ்தானில் செல்வாக்கு மிக்க தலைவராக வசுந்தராஜே அரசியலில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில் தற்போது வசுந்தரராஜேவுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார். மேலும் ராஜஸ்தானிலும் தற்போது கோஷ்டி பூசல் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பாஜக மேலிடம் கோஷ்டி பூசலை சரிசெய்து அனைத்து தலைவர்களும் ஒன்றாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது. அதற்கான முதல் நடவடிக்கை தான் வசுந்தரராஜேவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர போஸ்டர்களிலும் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருடன் வசுந்தரராஜே, பாஜக மாநிலத் தலைவர் சிபி ஜோஷி, எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் உள்ளிட்டவர்களின் படங்கள் ஒன்றாக இடம்பெற்றிருந்தன.

ராஜஸ்தானில் பாஜகவின் இந்த செயல்பாடு என்பது தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கும். அதோடு ஆளும் காங்கிரஸில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக உள்ள நிலையில் பாஜகவில் வசுந்தரராஜே ‛தாமரை’ கட்சியில் இருந்து விலகி இருந்தது பிளஸ் பாயிண்டாக இருந்தது. ஆனால் தற்போது வசுந்தரராஜே பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றது என்பது காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் தலைவலியாக மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.