`அன்னக்கிளி’ மூலம் 1976-ல் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த இசைஞானி இளையராஜா அகவையில் இன்று எண்பதைத் தொடுகிறார். இதனையொட்டி சமீபத்தில் அவர் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தினார். இன்றும் பலரின் இரவை தன் இசையால் நிரப்பிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் வாழக்கைப் பாதையில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களில் சில இதோ…
* காலை ஏழு மணிக்கெல்லாம் ரெக்கார்ட்டிங் தியேட்டர் வந்துவிடுவார். அடுத்த பத்து நிமிடத்திற்குள் அன்றைய படத்திற்கான இசைக்குறிப்புகளை கொடுக்க ஆரம்பித்துவிடுவார். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து கோடம்பாக்கம் புது ஸ்டூடியோவிற்கு அவர் மாறினாலும் கூட, இங்கும் ஏழு மணிக்கு ஆஜாராகிவிடுகிறார்.
* முழு சிம்பொனியை இசையமைத்த ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை இசைஞானிக்கு உண்டு. சாதாரண ஆர்மோனியம் கொண்டே பல்லாயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கியவர். ரஜினி, ஶ்ரீதேவி நடித்த ‘ப்ரியா’ முதன்முதலில் ஸ்டீரியோ போனிக் தொழில்நுட்பத்தில் வெளியான படம். இந்தியாவின் முதல் ஸ்டீரியோ ஸ்கோப் 3டி படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்திற்கான இசையையும் அமைத்தவர் ராஜாதான். இந்தியாவில் கம்ப்யூட்டரில் இசையமைத்த முதல் படம் என்ற பெயர் ‘விக்ரம்’ படத்திற்கு உண்டு.
* முதன்முறையாக மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வந்த பின், ஆபரணங்கள் அணிவதையும், அசைவம் உண்பதையும் விட்டுவிட்டார். இப்போதும் சைவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறார்.
* இன்னமும் அம்மாபிள்ளைதான். அம்மாவின் ஞாபகங்கள் வரும்போதெல்லாம் முல்லையாற்றின் கரையில் உள்ள லோயர் கேம்ப்பில் உள்ள தன் அம்மா சின்னத்தாயின் சமாதிக்குச் சென்றுவருவார்.
* சின்னத்திரையிலும் தன் கொடியைப் பறக்கவிட்டவர். ‘பெண்’ (1991), ‘நம்ம குடும்பம்’ (2008), ‘தெக்கத்திப் பொண்ணு’ (2008) ஆகிய தொடர்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
* எஸ்.பி.பி நடித்த ‘சிகரம்’, பார்த்திபனின் ‘புதிய பாதை’, பாக்யராஜின் ‘ஒரு கை ஓசை’ ஆகியவை இளையராஜா இசையமைக்க மறுத்த படங்களாகும்.
* போட்டோகிராபி மீது அலாதி ப்ரியம் உண்டு. காரில் எங்கு சென்றாலும் பின் சீட்டில் அமர்வதையே விரும்புவார். கூடவே ஆர்மோனியமும், ஸ்டில் கேமராவும் இடம் பெற்றியிருக்கும்.
* `உன்னைக் கைவிட மாட்டேன்’ எம்.ஜி.ஆர். நடிப்பில் பூஜை போடப்பட்ட படமாகும். இதற்கு இளையராஜா இசையைக்க கமிட் ஆனார். ஆனால், இந்தப் படம் பூஜையோடு நின்று போனதில் அவருக்கு வருத்தமும் உண்டு.
* முன்பு இசையமைப்பாளர்கள் யூனியன் ஒரு ஷிஃப்ட் முறை ஒன்றை வரையறுத்திருந்தது. காலை 7 மணி முதல் மதியம் ஒன்று வரை ஒரு ஷிஃப்ட். அதன்பிறகு மதிய 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை ஒரு ஷிஃப்ட் எனவும் பிரித்தது. இடையே ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. இப்படி ஷிஃப்ட் பிரித்ததினால் தான் இளையராஜா படங்களில் பாட ஆரம்பித்தார் என்றும் சொல்வார்கள்.
* திருவண்ணாமலை கோயிலின் பக்தரான இளையராஜா, தனக்கு நெருக்கமானவர்கள் இறந்தால், தவறாமல் அங்கு சென்று அவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவதுண்டு. அவரது இசைக்குழுவில் நீண்ட காலம் இருந்து மறைந்தவர்கள் தவிர மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் எஸ்.பி.பி.க்காகவும் மோட்ச தீபம் ஏற்றியிருக்கிறார். பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகள் ராஜா சார்!
இளையராஜா இசையில் உங்களுக்குப் பிடித்த பாடலைக் கமென்ட் பண்ணுங்க!