புதுடெல்லி: “மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றியே அதனைப் பெறவேண்டும்” என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார கான்க்ளேவ் நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கலந்து கொண்டார். அதில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் பற்றி பேசிய அமைச்சர், “அரசு பாரபட்சம் இல்லாத விசாரணையை விரும்புகிறது. அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆனால், அதற்கு முன்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளைப் பின்னபற்ற வேண்டும்.
இந்த வழக்குத் தொடர்பான குற்றச்சாட்டுகளை டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசால் நியமிக்கப்பட்ட குழு, பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த தனது விசாரணை அறிக்கையை அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் ஆளுங்கட்சி எம்.பி. என்பதால் விசாரணையில் பாரபட்சம் இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. டெல்லி போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள். நாம் அனைவரும் விரைவாக விசாரணை நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறோம்.
மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பிரிஜ் பூஷனுக்கு எதிரான அவர்களின் குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதேபோல, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க குழு அமைக்கும்படி, இந்திய ஒலிம்பிக் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களோ, பெண்களோ யாருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டும் சம்பவங்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எந்த காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அரசின் தலையீட்டை விரும்புகிறார்கள்” என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஒரு மைனர் வீராங்கனை உள்ளிட்டோர் ஒருமாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தங்களின் சர்வதேச விருதுகளை ஆற்றில் வீசப்போவதாக அறிவித்து இரண்டு நாட்களுக்கு பின்னர் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.