கிராமத்து சூப்பர் ஹீரோவான குமரனும் , ஊர் எல்லை சாமியான வீரனும் கைகோர்த்து, கார்ப்ரேட் வில்லனைப் பந்தாடுவதே ‘வீரன்’ திரைப்படம்.
பொள்ளாச்சி அருகில் உள்ள வீரனூரைச் சேர்ந்த சிறுவன் குமரன் மீது (ஆதி) இடி விழுகிறது. இதனால் சுயநினைவை இழக்கும் குமரனை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார் அவனது அக்கா. மின்னல் தாக்கியதால் தனக்கு சில ‘சூப்பர் பவர்கள்’ கிடைத்திருக்கின்றன என்பதை சுயநினைவு திரும்பிய பின்பு உணரும் குமரன், 14 ஆண்டுகளுக்குப் பின் கிராமத்திற்கு வருகிறார். இந்நிலையில், ஒரு கார்ப்பரேட் முதலாளியால் தன் கிராமத்தில் ஒரு அபாயகரமான திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்பதையும், அதனால் தன் கிராமமே அழியவுள்ளது என்பதையும் உணர்கிறார் குமரன்.
இந்த திட்டத்திற்காக வீரனூரின் எல்லை காவல்தெய்வமான `வீரன்’ கோயிலை இடிக்க முடிவெடுக்கிறார் வில்லன் வினய். வீரன் கோயிலையும், வீரனூரையும் காப்பாற்ற தன் சூப்பர் பவர்களின் உதவியால், `வீரன்’ என்கிற `சூப்பர் ஹீரோ’வாக அவதாரமெடுக்கிறார் குமரன். இறுதியில், கிராமத்து சூப்பர் ஹீரோ கார்ப்ரேட் வில்லைனை வீழ்த்தி, வீரனூரை காப்பாற்றினாரா என்பதை சுவாரஸ்யமற்ற திரைக்கதையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் வழக்கமான துறுதுறுப்பு இதில் மிஸ்ஸிங். எந்நேரமும் குழப்பத்துடனும், வாடிய முகத்துடனுமே சுற்றுகிறார். ‘சூப்பர் ஹீரோ’வாக மாறிய பின்பும் இதே முகபாவனைதான். ‘சூப்பர் ஹீரோ’விற்கான ‘எனர்ஜி’ கொஞ்சம்கூட இல்லை. கதாநாயகி ஆதிரா ராஜ் கிராமத்து காதலி கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்து மறைந்துபோகிறார். கார்ப்பரேட் வில்லனாகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் மிரட்டலாக அறிமுகப்படுத்தப்படும் வினய், மொத்தமே ஐந்து காட்சிகளுக்கு மட்டும் தலைக்காட்டி போகிறார். அதிலும் கிராமத்துத் திருவிழாக்களில் கிடக்கும் பொம்மைகளைப் பொறுக்கிவந்து ‘சயின்டிஸ்ட்’ என்று அவர் காட்டும் பில்டப் நம்மைச் சிரிக்கவைக்கிறது. ஆதியின் நண்பராக வரும் சசியும், அவரது அப்பா கதாபாத்திரமும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக நடித்து, கதையோட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள். காமெடிக்கு ‘முனீஸ்காந்த் – காளி வெங்கட்’ கூட்டணி படம் முழுவதும் வந்தாலும் மிகச் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்கள்.
கதாநாயகியை பெண் பார்க்க வரும் முருகானந்தம் தன் ஒன்லைன் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். வீரன் என்னும் சாமியை நம்பாமல், அமாவாசைப் பொங்கலுக்குக் காசு தராமல் ஊரே ‘பகுத்தறிவு கிராமமாக’ (?) இருக்கிறது. ஆனால் காரல் மார்க்ஸ், சே குவேரா படம் மாட்டிய நற்பணி மன்ற இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்டு கோயிலுக்குக் காசு தருகிறார்கள். இப்படி தன்னையறியாமல் சில நகைச்சுவைக்காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளுக்கு கைக்கொடுத்திருக்கிறது. காட்சிகளின் நீளத்திலும் தேவையில்லாத காட்சிகளிலும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே கவனம் செலுத்தி, இன்னும் நேர்த்தியாக தொகுத்திருக்கலாம். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில், இரண்டாம் பாதியில் வரும் ‘வீரன் திருவிழா’ பாடல் மட்டும் கவர்கிறது. ஆனால், அப்பாடலும் திரைக்கதைக்கு வேகத்தடையாகதான் உள்ளது.
ஒரு சாதாரண கிராமத்து இளைஞன் சூப்பர் ஹீரோவாக மாறுகிறான் என்றால், இளைஞனோடு பார்வையாளர்கள் உணர்வுரீதியாக முன்னரே இணைந்திருக்க வேண்டும். அப்போதுதான், அவன் எடுக்கும் அவதாரத்திற்கு பார்வையாளர்கள் கைத்தட்டுவார்கள். ஆனால், இப்படத்தில் குமரன் என்கிற இளைஞன் தொடக்கத்தில் இருந்தே பார்வையாளர்களோடு ஒன்றவில்லை. அதனால், குமரன் எடுக்கும் சூப்பர் ஹீரோ அவதாரம் பார்வையாளர்களிடையே எந்தத் தாக்கத்தையும் நிகழ்த்தவில்லை.
கண்டுக்கொள்ளப்படாத கிராம காவல் தெய்வக் கோயில், அதையே நம்பி வாழும் பூசாரி, காற்றாடும் டீக்கடை, அதன் நய்யாண்டி ஓனர், வெட்டி கதை பேசும் பெருசுகள், கார்ப்பரேட்டை நம்பி ஏமாந்த கிராம மக்கள், கிராமத்தின் நன்மைக்காக போராடும் இளைஞர்கள் என வீரனூரை ஒரு சில காட்சிகளிலேயே பதிய வைத்துவிடுகிறார் இயக்குநர். அடுத்ததாக, கார்ப்பரேட்டின் சதியையும், குமரனின் சூப்பர் பவரையும் விளக்க வண்டி வண்டியான காட்சிகளைக் கொட்டியிருக்கிறார். சுவாரஸ்யமற்ற, நீளநீளமான இந்தக் காட்சிகளில் பேசியதையே பேசிக்கொண்டிருக்கின்றன படத்தின் கதாபாத்திரங்கள்.
அந்தக் கிராமம் ‘வீரன்’ என்ற நாட்டார் தெய்வத்தை நம்பாமல் புறக்கணிக்க வேண்டிய காரணம் என்ன, உண்மையிலேயே ஹீரோவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா, இயக்குநர் படத்தின் மூலம் கடவுள் நம்பிக்கை பற்றி என்னதான் சொல்லவருகிறார் என்று ஒன்றும் புரியவில்லை. போதாக்குறைக்கு லேசர் மூலம் மின்சாரம், அதற்கு கேபிள்கள், காமெடி சயின்டிஸ்ட் வில்லன் என்று ஏகப்பட்ட உருட்டுகள். இந்த புராஜெக்டை வீரனூரில்தான் நிறைவேற்ற வேண்டும் என்று வில்லன்கள் துடிப்பதற்கும் அழுத்தமான காரணமில்லை. குமரனாவது சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவாரா என எதிர்ப்பார்த்தால், அதிலும் ஏமாற்றமே. சொடக்குப் போட்டு எதிராளியை ஹிப்னாடிஸம் செய்கிறார், கைகளில் மின் சக்தியை வர வழைத்து எதிரிகளைப் பறக்க விடுகிறார். இதையே மீண்டும் மீண்டும் செய்துக்கொண்டிருப்பது அலுப்பையே தருகிறது
இரண்டாம் பாதியிலும் சூடுபிடிக்காமல் அடம்பிடிக்கும் திரைக்கதைக்கு, பாடல்கள், காதல் காட்சிகள் என எல்லாமே ‘அபாயகரமாக’ மாறியிருக்கிறது. சூப்பர் ஹீரோ யார் எனக் கண்டுபிடிக்க வில்லன் எடுக்கும் முயற்சிகளும், அதை கதாநாயகன் சமாளிக்கும் காட்சிகளும், நம் பொறுமையை சோதிக்க சிறந்த கருவி. வீரன் என்கிற காவல் தெய்வம், அதன் பின்கதை, குதிரை என சுவாரஸ்யத்தைக் கூட்ட சில வாய்ப்புகள் கிடைத்தும் அதிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். வெறும் சண்டைக்காட்சிகளுக்கு மட்டும் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும் கதாநாயகனும், வலுவில்லாத ‘டெம்ப்ளேட்’ கார்ப்பரேட் வில்லனும், தறிகெட்டு ஓடும் இரண்டாம் பாதி திரைக்கதைக்கு கடிவாளம் போட பாடுபடுகிறார்கள். ஆனால், ‘நீளமான’ இறுதிக்காட்சி அவர்களின் முயற்சியில் மண்ணள்ளிப் போடுகிறது.
‘நம் திட்டத்துக்குத் தடையாக இருக்கும் வீரன் யார், வீரன் யார்’ என்று படம் முழுக்க வில்லன் குரூப் தேடிக்கொண்டேயிருக்கிறது. அவர்களுக்கு ஒன்று சொல்லவேண்டும். இந்தப் படத்தை கடைசிவரை பொறுமையாய் எரிச்சல் அடையாமல் யார் பார்க்கிறார்களோ அவர்களே வீரர்கள், வீராங்கனைகள்!