பெங்களூர்:
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் வருவதை போல மூக்கு முட்ட மது அருந்திவிட்டு அறுவை சிகிச்சை செய்ய வந்த மருத்துவர் ஒருவருக்கு நேர்ந்த கதி குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மருத்துவராக பணிபுரிபவர் பாலகிருஷ்ணா. இவர் மகப்பேறு சிறப்பு நிபுணர் ஆவார். இதனிடையே, இன்று 9 பெண்களுக்கு இவர் சில அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டி இருந்தது.
இதனால் அந்தப் பெண்களுக்கு காலை 8 மணிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. மதியம் 2 மணிக்குள்ளாக அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த நேரத்துக்கு மருத்துவர் பாலகிருஷ்ணா வரவில்லை. அவருக்கு செவிலியர்கள் போன் செய்து பார்த்த போதும் அவர் எடுக்கவில்லை.
இந்நிலையில், சுமார் 9 மணிக்கு டாக்டர் பாலகிருஷ்ணா ஆபரேஷன் தியேட்டருக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த செவிலியர்களை வெளியே செல்லுமாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்களும் அங்கிருந்து வெளியேறினர். மதியம் 2 மணிக்கு மேல் ஆகியும் டாக்டர் பாலகிருஷ்ணா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செவிலியர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது 9 பெண்களுடன் சேர்ந்து மற்றொருவராக ஒரு படுக்கையில் படுத்து அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்களில் சிலர் மயக்கம் தெளிந்து தனக்கு ஆபரேஷன் நடந்ததா இல்லையா என்ற குழப்பத்தில் அரை மயக்கத்தில் இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், மருத்துவர் பாலகிருஷ்ணாவை எழுப்பிய போது அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்யும் முன்பே போதையில் அவர் மட்டையானதும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் அந்தப் பெண்களின் உறவினர்கள், மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போதையில் அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவரை பணநீக்கம் செய்து போலீஸில் ஒப்படைக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மருத்துவர் பாலகிருஷ்ணா மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்தது.