"மகளிரால்தான் கட்சியே அழிகிறது" – அரசு ஊழியரை மிரட்டினாரா திமுக ஊராட்சித் தலைவர்… நடந்தது என்ன?

தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தற்போது ஊரகப் பகுதிகள் வரை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பணியிடங்களுக்கான ஆட்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தேர்வு செய்யும் முறை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றிருக்கிறார் மேல்பாதி கிராம தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் மணிவேல். அப்போது, இந்தப் பணி நியமனம் தொடர்பாக கோலியனூர் வட்டார மேலாளர் காயத்ரியிடம் பேசினாராம்.

தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் மணிவேல்

உடனே இருவரிடையே வார்த்தைகளில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால், கோபமடைந்த தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்… அரசு அதிகாரி காயத்ரி மற்றும் அலுவலக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வீடியோவின் துவக்கத்திலேயே அச்சில் ஏற்ற முடியாத வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர், “நீங்களா போய் வீடு வீடாக ஓட்டு கேட்பீங்க. எங்க கட்சியைக் கெடுக்குறீங்க நீங்க. மகளிரால்தான் கட்சியே அழிகிறது. ஒரு கட்சிக்காரன் சொன்னா கேட்கணும். ஆனா, நீங்க அ.தி.மு.க-வுக்கு ஜால்ரா தட்டுறீங்க. எங்களுக்கு மேல் இருப்பவர்கள் எங்களை அடக்கி வைத்திருப்பதால்தான், நீங்கள் எல்லாம் ஆடுறீங்க” என்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இது தொடர்பாக மேல்பாதி ஊராட்சி மன்றத் தலைவர் மணிவேலிடம் விளக்கம் கேட்டோம். “நாங்கள் சொல்லும் ஆட்களைத்தான் பணியில் போட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. அவர்கள்தான் 10,000 முதல் 50,000 ரூபாய் வரை கமிஷன் வாங்கிக்கொண்டு பணியிடங்களை நிரப்புகிறார்கள். அதிலும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை அந்தப் பணியில் போட்டு விடுகிறார்கள். ஆனால், கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அது தெரிவதில்லை. கட்சிக்காரர்களோ… ‘நாங்கள் கட்சிக்காக உழைக்கவில்லையா, வேறு கட்சியில் இருப்பவர்களுக்கு பணியை போடுகிறார்களே’ என்கிறார்கள். ஊர் மக்களோ… ‘தலைவர் சொல்லிதானே அந்த பொறுப்பில் போடுகிறார்கள். அப்படி என்றால் தலைவர் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பு போடுகிறாரா’ என்றெல்லாம் தவறான பேச்சு போகிறது.

மணிவேல் – திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

எனவே இந்தப் பணிக்காக விண்ணப்பித்து, தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட எங்கள் ஒன்றியத்தின் பொதுமக்கள், கட்சிக்காரர்களுடன் பி.டி.ஓ ஆபீஸுக்கு நேற்று காலை சென்று… அங்குள்ள ஓர் அறையில் எங்கள் கட்சி சார்பில் மீட்டிங்போல வைத்துப் பேசினோம். அங்கு வந்த மேடமிடம், `என்னமா இப்படியெல்லாம் பண்றீங்கன்னு… கட்சிக்காரர்கள் எல்லாம் குறை சொல்றாங்களே’ என்று கேட்டதும், `கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல நாங்கள் இல்லை. நான் யாருக்கும் பதில் சொல்ல முடியாது’ என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போய்விட்டார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் எல்லாம் ஆவேசமடைந்தார்கள். அந்த மக்களை ஒன்றியச் செயலாளர், சேர்மன் எல்லாம் அடக்கினார்கள். உடனே நான் அந்த அதிகாரியிடம் சென்று அமைதியாகப் பேசினேன். கொஞ்ச நேரத்தில் அவர்கள் வீடியோ எடுத்தார்கள். `என்ன மேடம், நான் அமைதியாகத்தானே பேசுகிறேன். எதுக்கு வீடியோ எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டதும், அவர்கள் சில வார்த்தைகள் பேசினார்கள்.

`நீங்க ஏன் இந்த ஆபீஸூக்கு வந்தீங்க. ஆபீஸைவிட்டு வெளியே போங்க. உனக்கெல்லாம் இங்கே என்ன வேலை, உன்னையெல்லாம் யார் உள்ளே விட்டது’ என்றெல்லாம் பேசினார்கள். அதையெல்லாம் அவர்கள் ரெக்கார்டு செய்யவில்லை. நான் அவரிடம் என்ன கேட்டேன் என்றால், நீங்கள் யாரை வேணாலும் அந்தப் பணியில் போடுங்கள். மூன்று பேரை போடுகிறீர்கள் என்றால் அதில் ஒருவரையாவது எங்கள் கட்சிக்காரரைப் போடுங்கள் என்றேன். அதற்கு அவர்கள், `எங்களுக்கு மேல் இடத்து உத்தரவு. இதை, இப்படித்தான் போட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். உங்களது பேச்சையெல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. முதலில் இங்கிருந்து வெளியே போங்கள்’ என்றார்கள்.

வீடியோ காட்சி

நாங்கள் ஏன் அவர்களிடம் இதைக்கூட கேட்க போனோம் என்றால்… எங்களது கட்சியில் (தி.மு.க) தற்போது உறுப்பினர்களைச் சேர்க்கச் சொல்கிறார்கள். மக்களிடம் உறுப்பினர் சேர்ப்பதற்காகச் சென்றால், `உங்களால ஆயம்மா வேலையைக்கூட வாங்கித்தர முடியவில்லை. உறுப்பினராக சேர்த்து என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். அதைத்தான் நான் அவர்களிடம் வெளிப்படுத்தினேன். `உறுப்பினர் சேர்க்கைக்குக்கூட பொதுமக்கள் பெயர் தர மாட்டோம் என்கிறார்கள். நீங்கள் மகளிர் குழு மூலமாகத்தான் பணியைப் போடுவீர்கள் என்றால், மகளிர் குழுவில் இருப்பவர்கள் அவர்களின் உறவினர்களைப் பார்த்து போட்டுக் கொள்கிறார்கள். அப்படியென்றால் பொதுமக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்… அந்த மகளிர் சங்கத்தில் இருந்தவர்கள் மட்டும்தான் ஓட்டு போட்டார்களா… மற்றவர்கள் எல்லாம் போடவில்லையா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். இந்த மாதிரி எல்லாம் ஏன் செய்கிறீர்கள். நீங்கள் இப்படி செய்வதால்தான் பிரச்னை அதிகமாகிறது’ என்று இவற்றையெல்லாம்தான் அவர்களிடம் முன்வைத்தேன்.

அவர்களிடம் ஆவேசமாக பேசியபோது, நான் ஆதங்கத்தில் சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன்போல. அதை அந்த மேடம்தான் வீடியோ எடுத்தார்கள். அவர்கள் பேசியதையெல்லாம் விட்டுவிட்டு, நான் பேசியதை மட்டும் வீடியோ எடுத்து வெளியே விட்டிருக்கிறார்கள். மக்கள் குறைகளை கேட்கச் சென்ற ஓர் ஊராட்சி மன்றத் தலைவரை மரியாதைக் குறைவாக அவன், இவன் என அவர்கள் பேசியதை ஏன் அவர்கள் வெளியிடவில்லை” என்றார் காட்டமாக.

இது தொடர்பாக மகளிர் திட்ட அலுவலக கோலியனூர் வட்டார மேலாளர் காயத்ரியிடம் பேசினோம். “அவர்கள் சொல்லும் ஆட்களுக்கு வேலை போடவேண்டும் என்று சொன்னார்கள். நான், ‘போடமாட்டேன்’ என்றுகூட அவரிடம் வாக்குவாதமே பண்ணவில்லை. பி.டி.ஓ ஆபீஸிலுள்ள ஓர் அறையில் என்னை கூப்பிட்டுப் பேசும்போது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார்கள். அந்த வார்த்தைகள் பிடிக்காமல் அங்கிருந்து நான் வெளியேறி வந்துவிட்டேன். என் அறைக்கு நான் வந்த பின்னர், அவர்கள் பின்னாடியே வந்து மீண்டும் பேசினார்கள். அப்போதுதான் அந்த வீடியோ எடுக்கப்பட்டது. தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் தெய்வீகசிகாமணி, `நான் சொல்லும் நபர்களுக்கு வேலை போடுங்கள்’ என்றார். நான், அதனை சரிபார்த்து பரிசீலிக்கிறேன் என்று கூறுகிறேன். ஓர் அதிகாரி அதைக்கூடச் சொல்லக் கூடாதா… 

விழுப்புரம்

உடனே, அவர்கள் தங்களுடைய கட்சிக்காரர்களுடன் அலுவலகத்துக்கு வந்து, இவ்வாறு பேசினார்கள். இது குறித்து வளவனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். சி.எஸ்.ஆரும் பதியப்பட்டிருக்கிறது. நான் இங்குப் பணியில் இணைந்து மூன்று நாள்கள்தான் ஆகின்றன. இந்தக் கோப்புகளை நான் தொட்டுக்கூட பார்க்கவில்லை. அப்படியே பார்த்திருந்தாலும், மூன்று நாள்களில் எத்தனை பேரிடம் அவர்கள் சொல்வதைப்போல நான் பேசியிருக்க முடியும். எனக்கு கமிஷன் என்பதே பிடிக்காது. நான் கமிஷன் வாங்கினேன் என்று அவர்கள் நிரூபித்தால், நான் வேலையைவிட்டே சென்று விடுகிறேன். இவர்கள் ஏமாற்றுவதை மறைப்பதற்காக, நான் கமிஷன் வாங்கினேன் என்று கூறுகிறார்களா… அவர்கள் என்னென்ன பேசினார்கள் என்ற வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.