சென்னை: தமிழ்த் திரையுலகின் வைகைப்புயல் வடிவேலு தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் வடிவேலு தான் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
இதனிடையே வடிவேலு பற்றி அவருடன் நடித்த பலரும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது காமெடி நடிகர் கொட்டாச்சியும் வடிவேலு குறித்து பரபரப்பான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
வடிவேலு தான் என் கேரியரை சோலி முடித்தார் : வைகைப்புயல் வடிவேலு மாமன்னன் படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்றுதான் நடந்து முடிந்தது. இந்நிலையில் வடிவேலு குறித்து காமெடி நடிகர் கொட்டாச்சி வேதனை தெரிவித்துள்ளார்.
நாள் நட்சத்திரம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கொட்டாச்சி. வித்தியாசமான உடல்மொழி, வசன உச்சரிப்பு மூலம் கவனம் ஈர்த்த கொட்டாச்சி தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் உட்பட வடிவேலு, மறைந்த நடிகர் விவேக் ஆகியோரின் கூட்டணியிலும் நடித்துள்ளார் கொட்டாச்சி.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே சினிமா வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிவிட்டார். அதேநேரம் அவரது மகள் மானஸ்வி கொட்டாச்சி குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு வடிவேலு தான் காரணம் என கொட்டாச்சி கூறியுள்ளார்.
இதுபற்றி யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள கொட்டாச்சி, வடிவேலு தன்னை விட யாரும் அதிகம் ஸ்கோர் செய்துவிடக் கூடாது என தெளிவாக இருப்பார். தவசி படப்பிடிப்பில் நடந்த சம்பவமே அதற்கு சரியாண உதாரணம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது தன்னுடைய நடிப்பு திறமை வெளியே தெரியகூடாது என கேமரா முன் சென்று என்னை மறைத்துவிட்டார். அதனால், நான் அந்தப் படத்தில் இருந்தே விலகிவிட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எனக்கு வந்த பல வாய்ப்புகளை வடிவேலு தட்டிப் பறித்துவிட்டார். அப்போதெல்லாம் மறைந்த நடிகர் விவேக் தான் எனக்கு உதவி செய்தார். அதோடு அவர் நடித்த படங்களில் தனக்கும் சான்ஸ் வாங்கிக் கொடுத்ததாகக் கொட்டாச்சி கூறியுள்ளார். விவேக் எப்போதுமே தன்னுடன் இருப்பவர்களை தூக்கிவிட வேண்டும் என்று நினைப்பார். ஆனால் வடிவேலு தன்னுடன் நடிப்பவர்கள் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார் என கொட்டாச்சி கூறியுள்ளார்.