புவேனஸ்வர்: ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கே மீட்பு பணிகள் மேற்கொள்வது கடினமாகி உள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை.
மாறாக ஒரு ரயில் தடம் புரண்டதால் இன்னொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதன்படி இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.
இதே பாதையில் வந்த இன்னொரு சரக்கு ரயிலும் அடுத்த சில நிமிடங்களில் பின்னால் மோதி தடம் புரண்டு உள்ளன. இந்த விபத்தில் 16 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 80 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 300 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு நோக்கி வரும் ரயில் என்பதால் இதில் பல தமிழர்கள் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இதனால் ஒடிசா நோக்கி தமிழக அதிகாரிகள் குழு விரைந்துள்ளனர். அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தமிழக அதிகாரிகள் குழு ஒடிசாவுக்கு விரைந்து உள்ளது. ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா அருகே ரயில்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் – காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் கடினம்: இந்த விபத்து நடந்த பகுதி காட்டு பகுதி ஆகும். இதனால் அங்கே தொலைத்தொடர்பு இல்லை. அதோடு மீட்பு படைகள் செல்ல சரியான சாலை வசதி இல்லை. காட்டு பகுதிக்கு அருகே இருக்கும் கிராம மக்கள்தான் அங்கே மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.