ஒடிசா: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில், ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.
இந்த ரயில் விபத்தில், 7-க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தடம் புரண்ட ரயிலுக்குள் பயணிகள் பலர் சிக்கியுள்ள நிலையில், இரவு நேரம் என்பதால் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.
ரயில் விபத்து நடந்த பகுதியில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிய 67882 62286 அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் வெளியிடப்பட்டுள்ளது.
6 பேர் பலி: ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.