சென்னை : கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள தகவல் உதவி மையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. ரயிலில் பயணம் செய்த்தவர்களின் குடும்பத்தினர் இதில் தமிழில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கோரமண்டல் ரயில் கோர விபத்து : ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தின் பாஹானாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டது. 300-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்திருப்பதாகவும், 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வருவதற்கு முன்பதிவு செய்தவர்கள் 869 பேர் என்றும், மூன்றாவது ரயில் நிலையத்திலேயே விபத்து ஏற்பட்டதால் சுமார் 200 பேர் சென்னைக்கு பயணித்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதில் குறைந்தபட்சம் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் : சென்னை நோக்கி வந்த ரயில் ஒடிசா மாநிலத்தில் விபத்துக்குள்ளான நிலையில், தகவல் அறிந்ததுமே உடனடியாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மூன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டார். உடனடியாக Helpline உருவாக்கி பயணிகள், குடும்பத்தினருக்கு உதவிடவும் உத்தரவிட்டார்.
உடனடியாக ஹெல்ப்லைன் : தமிழ்நாடு அரசு விரைவாகச் செயல்பட்டு, உதவி எண்களை உடனடியாக அறிவித்தது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. Toll Free No : 1070, Landline : 044 2859 3990, Mobile No: 94458 69843 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் அறியலாம். ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் – ஐஏஎஸ் அதிகாரிகள் : தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல உள்ளார். தற்போது அரியலூரில் இருக்கும் சிவசங்கர், நாளை காலை முதல் விமானத்தில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர்.
போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை : மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நாளை ஒடிசா செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரம் கருதி உதயநிதியையும் ஒடிசா செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு பயண பட்டியலை கொண்டு தமிழக பயணிகளை மீட்கும் பணி நடைபெறுகிறது எனத் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் மீட்பு பணிக்காக தமிழ்நாடு காவல்துறை ஒடிசாவுக்கு செல்லும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்தார்