சென்னை: மறைந்த கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சினிமா, இலக்கியம், அரசியல் என பல துறைகளிலும் கருணாநிதி செய்த சாதனைகள் மகத்தானது.
அதேபோல், கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையேயான நட்பு இன்றும் திரையுலகில் ஒரு ரத்தினமாக ஜொலித்து வருகிறது.
திரையுலகில் எம்ஜிஆருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க கலைஞர் கருணாநிதி தான் காரணமாக இருந்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியும் எம்ஜிஆரும் : தமிழ்நாட்டின் மகத்தான ஆளுமைகளில் மிக முக்கியமானவர் கலைஞர் கருணாநிதி. இலக்கியம், சினிமா, அரசியல் என கலைஞர் தடம் பதித்த இடங்களில் எல்லாம் தனக்கான மாபெரும் அடையாளத்தை உருவாக்கினார். அதேபோல், தன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்களுக்கும் கலைஞர் ஒரு கலங்கரை விளக்கமாகவே வாழ்ந்து மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் கலைஞர் கருணாநிதிக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தாலும், எம்ஜிஆருக்கும் அவருக்கும் இடையே இருந்த நட்பு மிகவும் முக்கியமானது. ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த எம்ஜிஆருக்கு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுக்கொடுத்தது கலைஞர் கருணாநிதியே. மந்திரகுமாரி படத்தில் கலைஞர் எழுதிய வசனங்களே எம்ஜிஆரை ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற காரணமானது.
அதேபோல் ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி, அரசிளங்குமரி, நாம், மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களிலும் எம்ஜிஆருக்காக வசனம் எழுதியுள்ளார் கலைஞர். இதுமட்டும் இல்லாமல் எம்ஜிஆரையே அசர வைக்கும் வைக்கும் அளவிற்கு ஒரு பாடல் வரியும் எழுதி சர்ப்ரைஸ் கொடுத்திருந்தாராம்.
எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் தங்கம் திரைப்படத்துக்காக பாடல் எழுதிக்கொண்டிருந்தாராம் வாலி. அப்படத்தில் இடம்பெற்ற ஒரு காதல் பாடலுக்கான முதல் வரியை எம்.எஸ். விஸ்வநாதனே வாலியிடம் கூறியுள்ளார். ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்ற அந்த முதல் வரியை கேட்ட வாலி, அடுத்த வரியாக என்ன போடுவது என யோசித்துக்கொண்டே இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற கலைஞர் கருணாநிதி, ‘என்னய்யா வாலி பாட்டு எழுதியாச்சா?’ என கேட்டுள்ளார்.
அதற்கு முதல் வரியான ‘நான் அளவோடு ரசிப்பவன்’ எனக் கூறிய வாலி, அடுத்த வரி சரியாக அமையவில்லை என புலம்பியுள்ளார். உடனே அதே ஸ்பாட்டில் ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என அடுத்த வரியை கூறியுள்ளார் கலைஞர் கருணாநிதி. பின்னர் ஒருமுறை இந்த பாடல் வரிக்காக வாலியை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார் எம்ஜிஆர். அப்போது ‘அந்த வரிக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் கருணாநிதிக்கு கொடுங்கள்’ என வாலி கூறிய பின்னரே எம்ஜிஆருக்கும் உண்மை தெரியவந்ததாம்.