பாலசோர்: ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகளும், போலீஸாரும்விரைந்தனர். அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் இருந்து கிரேன்களும் வரவழைக்கப்பட்டு, துரித கதியில் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரவிலும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது.
பாலசோர் மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். மருத்துவக் குழுக்களும் விரைந்துள்ளன. அங்குமுகாம்கள் அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரயில்வே உயர் அதிகாரிகளும் சென்று, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று ரயில்வே சிறப்பு மீட்பு பணி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 233-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதம் அதிகமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் பாலசோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் வனப்பகுதி என்பதால் மீட்பு, நிவாரணப் பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. விபத்து காரணமாக அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒடிசா முதல்வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர்.
அவசர எண்கள் அறிவிப்பு: விபத்து குறித்து தகவல் அறிய, சிறப்பு மீட்பு படை அலுவலகத்தின் அவசர எண் வழங்கப்பட்டுள்ளது. 6782262286 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் விவரம் அறிய 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என ரயில்வே மீட்பு பணி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.