சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 2 பேரின் ஆயுள் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் நாமக்கல்லை சேர்ந்த சுவாதி என்ற வேறொரு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி சென்றுள்ளனர். அப்போது, ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தியது. பிறகு, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிபிசிஐடி விசாரணையில், கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவை நிறுவனரான யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மதுரை வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உயிரிழந்துவிட்டதால், எஞ்சிய 15 பேர் மீதான விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்தது.
குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகிய 2 பேருக்கும் 3 பிரிவுகளில் வாழ்நாள் ஆயுள் தண்டனையும், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், பிரபு, கிரிதர், சந்திரசேகரன் ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. எஞ்சிய 5 பேரை விடுதலை செய்தது.
ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில்பாதை ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அவர்கள் தமது உத்தரவில் கூறியதாவது:
சாதி என்ற பேயின் தாக்குதல்: கோகுல்ராஜ் கொலைக்கு திட்டமிட்ட உள்நோக்கம் இல்லை என்றாலும், கொலைக்கு சாதிதான் முக்கிய காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது. சாதி என்றபேயின் தாக்கத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணை நீதிமன்றம் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்துதான் தண்டனை வழங்கியுள்ளது. அரசு தரப்பிலும் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை.
எனவே, யுவராஜுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதுமான ஆயுள் தண்டனையை நாங்களும் உறுதி செய்கிறோம். மேலும், அருண், குமார்,சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன் ஆகிய 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்கிறோம். பிரபு, கிரிதர் ஆகிய 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கிறோம். இந்த வழக்கில் 5 பேரை விடுதலை செய்தது சரியானதுதான் என்பதால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
தண்டனைக் காலத்தில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்க கூடாது. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி,உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு ஆஜரானபோது, பிறழ் சாட்சியம் அளித்தார் என்பதற்காக அவர் மீது நீதிமன்றமேமுன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குதொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.