Tamil News Live Today: கோர ரயில் விபத்து… தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு!

தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு!

முதல்வர் ஸ்டாலின்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். “ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். அரசின் சார்பில் இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து!

ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், “கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் – நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று கழகத் தலைவர் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

அண்ணா அறிவாலயம்

ஆகவே இன்றைய நாள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, முத்தமிழறிஞர் கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

இன்று வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.