தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திருச்சி வழியாக தினமும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்குச் செல்லும் ‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்’ (12634) ரயிலானது நேற்று முன்தினம் மாலை 5.45 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியிருக்கிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சிக்கு வந்த அந்த ரயிலானது, விருத்தாசலம் நோக்கி புறப்பட்டது. சரியாக சுமார் 1 மணியளவில், திருச்சி பிச்சாண்டார் கோயில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றபோது, ரயில் தண்டவாளத்திற்கு நடுவே ஒரு லாரி டயர் படுக்க வைக்கப்பட்ட நிலையிலும், இன்னொரு டயர் செங்குத்தாக நிற்க வைக்கப்பட்ட நிலையிலும் இருந்திருக்கிறது.
இதனைக்கண்டு ரயில் என்ஜின் டிரைவர் ரகுராமன் மற்றும் உதவி என்ஜின் டிரைவர் வினோத் ஆகியோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்துவதற்குள்ளாக, ரயிலின் வேகம் கட்டுப்படுத்தப்பட முடியாமல், தண்டவாளத்தில் கிடந்த 2 டயர்களின் மீதும் மோதி ஏறி இறங்கியிருக்கிறது. மோதிய வேகத்தில் ஒரு டயர் ரயில் என்ஜினில் சிக்க, மற்றொரு டயரானது ரயில் தண்டவாளத்திலேயே கிடந்தது.
இதனால் ரயில் என்ஜினையும், பெட்டிகளையும் இணைக்கும் கேபிள் பைப் ஒன்று துண்டாக, பயணிகள் இருந்த பெட்டியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயிலில் ஏதோ அசம்பாவிதமான சம்பவம் நடந்துவிட்டது என உறக்கத்திலிருந்த பயணிகளும் பதறிப் போயினர். சம்பவம் குறித்து ரயில் என்ஜின் டிரைவர், விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாருக்கு புகார் கொடுத்தார். அதையடுத்து, ரயில்வே இருப்புப்பாதை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு கமிஷனர் சின்னத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனையடுத்து ரயிலில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு 1.05-க்கு நிறுத்தப்பட்ட ரயிலானது, 1.45 மணிக்கு சரிசெய்யப்பட்டு 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் டயர்களை வைத்த மர்ம நபர்கள் யார்?.. என்ன காரணத்திற்காக இந்தச் செயலைச் செய்தனர்?… என்பது குறித்து திருச்சி ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையிலான போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களின் சதியால் பெரும் விபத்து ஏற்படவிருந்த சூழலில், ரயில் என்ஜின் டிரைவர்களின் சாமர்த்தியத்தால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.