உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான செயலக அதிகாரிகளுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுமார் 130 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அவர்களின் சர்வதேச தொடர்புகளை இந்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
இவ்வருட ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ள இந்நாட்டிற்கு வருமாறு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச நிபுணர்கள் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைசார் கருத்துப் பரிமாறல்களில் ஈடுபடுதல், உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடல் மற்றும் கொள்கை கருத்துப் பரிமாற்றங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்வதும் அவர்களின் வருகையின் நோக்கமாகும்.
உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்குப் பங்களிக்க கொரிய எக்ஸிம் வங்கியும் தற்போது முன்வந்துள்ளதாகவும், ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி. (MIT) போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களும் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமானது, ஆராய்ச்சிக்கான பட்டப்பின் படிப்பு நிறுவனமாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்து எதிர்கால ஆய்வுகளையும் இந்த நிறுவனத்தின் ஊடாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு பங்களிக்கும் எந்தவொரு நாடும் அல்லது அமைப்பும் பல்கலைக்கழகத்தின் பங்காளர்களாகி பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் அங்கத்துவம் வகிக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் அரச அதிகாரிகளுக்கான குறுகிய கால கற்கைநெறிகளை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகமொன்றை ஸ்தாபித்தல், பசுமை பொருளாதாரத்தை உருவாக்குதல், சூழல்நேய பசுமை அபிவிருத்தி மற்றும் புத்தாக்க முகாமைத்துவம் ஆகிய விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கடல் மாசு மற்றும் மின்சார வாகனங்களின் பாவனை போன்ற துறைகளில் இலங்கை பின்தங்கிய நிலையில் உள்ளமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தனியார் துறை மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றை தனியொரு அதிகாரசபையின் கீழ் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதன் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையை பிராந்தியத்தில் முன்னணி கப்பற்துறை மையமாக மாற்றுவதற்கான பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையில் அனர்த்தங்களை தடுப்பதற்கான அதிகாரசபை இல்லாமை பாரிய பிரச்சினையாகியுள்ளது எனவும், அனர்த்தங்கள் ஏற்படும் வேளைகளில் இந்தியாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளின் மீது மாத்திரம் தங்கியிருக்காமல் முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், ஐரோப்பியக் பிரதிநிதிகள் குழுவொன்றும் அதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும், அக் குழு ஜூன் 12ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தந்து சர்வதேச தரத்திலான அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கான திட்டமிடல் வழிகாட்டல்களை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தனியார் துறை நிதியங்களின் உதவியுடன் அரத்த முகாமைத்துவ பிரிவொன்றை நிறுவதற்கு கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) ஆர்வம் காட்டும் நிலையில், காலநிலை அனர்த்தங்கள் தொடர்பான கடல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காட்டும் நிறுவனங்களும் ஆதரவளிக்க முன்வந்துள்ளன.
இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆனந்த மல்லவதந்திரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, சர்வதேச அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்ட துறைசார் நிறுவன அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.