புவனேஷ்வர்: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது. நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த ரயில் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெறும் சில நிமிடங்களில் கோரமண்டல் எகஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் அந்த இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளன. அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது. ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டு கவிழ்ந்தது.
பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து கிடைந்தது. ரயிலில் பயணம் செய்த பயணிகள் விபத்தில் சிக்கி அபயக்குரல் எழுப்பினர். நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதால் விபத்து மீட்பு பணிகளிலும் கடும் சிரமங்கள் இருந்தன. எனினும் விரைந்து வந்த மீட்பு படையினர் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரயில் தண்டவாளங்களில் ரத்தக்கறைகளும் சிதைந்த உடல்களும் என அந்த இடமே நெஞ்சை உறைய வைக்கும் விதமாக காட்சி அளித்தது. மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். கோரமண்டல் ரயில் என்ஜின், 4 பெட்டிகள், 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதனால், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து நடைபெற்றது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:- சென்னை நோக்கி வந்து கொண்டிந்த கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு சரக்கு ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ரயில் பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்து இருக்கின்றன.
தடம் புரண்ட இந்த பெட்டிகள் மீது யெஸ்வந்த்பூர் – ஹவ்ரா அதிவிரைவு ரயில் மோதியிருக்கிறது. நேற்று மாலை 6.50 மணியில் இருந்து 7.10 க்குள் இந்த மொத்த துயரமும் நடந்துமுடிந்துள்ளது. ரயில் விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து இருக்கும் நிலையில், ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகே ரயில் விபத்து நடைபெற்றது எப்படி? என்ற முழு விவரங்களும் தெரியவரும்.