ஹைவேஸில் இளையராஜாவை இன்பமாக ஹம்மியபடியோ.. அனிருத்தை அலறியபடியோ காரில் டிரைவ் போவதெல்லாம் வேற லெவல் அனுபவமாகத்தான் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் ஹைவேஸில் காரில் டிரைவ் போவது, கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கிறது.
இது ரொம்ப நாட்களாக நடக்கிற – நடந்து கொண்டிருக்கிற விஷயம்தான். நண்பர் ஒருவர் திருச்சி – பாடாலூர் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தார். திடீரென கார் விண்ட்ஷீல்டில் முட்டைகளை யாரோ வீசி எறிய… நண்பர் தடாலென வைப்பரை ஓட விட்டிருக்கிறார். என்னதான் வைப்பர் போட்டாலும் விண்ட்ஷீல்டு விசிபிலிட்டி காலியாகும்தானே! சட்டென பிரேக் போட்டு காரை நிறுத்திய அடுத்த நிமிடம்… தடதடவென நான்கைந்து பேர் காரைச் சுற்றுப்போட்டு, நண்பரையும் அவர் குடும்பத்தினரையும் கத்தி முனையில் மிரட்டிவிட்டு, பணம்/போன் என எல்லாவற்றையும் அபேஸ் செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இன்னும் மிரண்டு பிடிக்கும் சில டிரைவர்களைத் தாக்கிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
இது சில நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவம். பி.தன்ராஜ் என்பவர் சென்னையில் பணிபுரியும் மெக்கானிக்கல் இன்ஜீனியர். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஊரான கரூரில் இருந்து தனது காரில் வந்து கொண்டிருக்கிறார். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்ப்பேட்டை டோல் பிளாஸாவைத் தாண்டிய சில கிமீ–களில்… அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. திடீரென தனது காரின் பின் பக்கம் உள்ள விண்ட்ஷீல்டில் பெரிய சத்தம்.
யாரோ கல் எறிந்திருக்கிறார்கள். இவர் கண்ணாடி உடைந்ததைக் கவனித்து, காரை நிறுத்திச் சோதனை செய்ய… யாருமே இல்லாத இருட்டில் யாரோ சிலர் வருவதைக் கவனித்த அவர்… சட்டென வண்டியைக் கிளப்பி நல்லவேளையாக அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டார். பிறகு போலீஸ் ஹெல்ப்லைன் 100–க்கு போன் செய்திருக்கிறார். ‘‘செங்குறிச்சி கிராமத்துப் பக்கம் ஒழுங்கான நெட்வொர்க் கவரேஜ் இல்லை; உடனே நான் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சட்டெனக் கிளம்பிவிட்டேன்!’’ என்கிறார் தன்ராஜ்.
சில 100 மீட்டர்கள் கழித்து ஒரு பெட்ரோல் பங்க்கில் காரை நிறுத்தி, NHAI (National Highway Authority of India) ஹெல்ப்லைன் நம்பரான 1033–க்கு போன் செய்திருக்கிறார். அவர்கள் ஒரு மணி நேரம் கழித்து ஸ்பாட்டுக்கு வர… பிறகுதான் இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு கொள்ளைச் சம்பவம் என்பது தெரிய வந்திருக்கிறது.
வேலூர் / பெங்களூர் நெடுஞ்சாலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சிலர் காரை நிறுத்திய அடுத்த நிமிடத்தில், மோட்டார் சைக்கிளில் சிலர் மாஸ்க் போட்டு வருவதாகவும், அவர்கள் காரில் பயணிப்பவர்களைப் பயமுறுத்திப் பணம் பறிப்பதாகவும் பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
கள்ளக்குறிச்சி சூப்பரிண்டென்ட் என்.மனோகர், ‘‘இந்த ஏரியாவில் பேட்ரோலை அதிகப்படுத்தி இருக்கிறோம். அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களைப் பற்றிய அடையாளம் தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இங்கு பதிவாகவில்லை!’’ என்கிறார்.
எனவே, நெடுஞ்சாலையில் பயணம் போகிறவர்களுக்கு உயிர் காக்கும் சில முக்கியமான டிப்ஸ்!
-
யாராவது உங்கள் கார் விண்ட்ஷீல்டில் முட்டைகளை அடித்தால்… உடனே வைப்பர் போட வேண்டாம். அது விசிபிலிட்டியை இன்னும் பாதிக்கும்.
-
வேண்டுமென்றே நடக்கும் இதுபோன்ற சம்பவங்களின்போது, காரை உடனே நிறுத்த வேண்டாம். சில கிமீ–கள் காரை ஓட்டிச் சென்று, பாதுகாப்பான இடம் பார்த்து நிறுத்திச் சோதனை போடவும்.
-
யாராவது வெளியே பைக்கில் செல்பவர்கள், நம் காரைச் சுட்டிக்காட்டி, ‘பஞ்சர் ஆயிடுச்சு; காற்று இல்லை; கதவு திறந்திருக்கிறது’ என்று சொன்னால்… உடனே காரை நிறுத்திச் சோதனை போடுவதையும் தவிர்க்கவும். (இந்த நேரத்தில் எனக்கு பெர்சனலாக நடந்த ஒரு விஷயம்: ‘உங்க கார்ல புகை வர்ற மாதிரி இருக்கு’ என்று என்னைக் காரை நிறுத்தச் சொன்ன நபர் ஒருவர், நிஜமாகவே என் காரில் புகை வந்து நெருப்புப் பிடிக்கப் போன சமயத்தில்… கூடவே இருந்து ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றித் தந்து… நான் கிளம்பியவரை உடனே இருந்து உதவினார். அவர் ஒரு மெக்கானிக் என்று அறிமுகம் செய்து கொண்டார். இப்படி நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்!) சில கயவர்களால், இவர்களைப்போன்ற நல்லவர்களையும் நம்ப முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
-
இதுபோன்ற திடுக்கிடும் சம்பவங்கள் நடந்தால், உடனே ஹெல்ப்லைன் 100–க்கு போன் செய்யவும். அல்லது பெட்ரோல் பங்க்குகளில் பாதுகாப்பாக காரை நிறுத்தி, 1033 நம்பருக்குத் தொடர்பு கொள்ளவும். மறக்காமல் காவல்துறையிடம் புகாரைப் பதிவு செய்துவிட்டு வரவும். அப்போதுதான் பேட்ரோலை அதிகப்படுத்துவது, சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது என்று காவல்துறையும் அலெர்ட்டாக இருக்க முடியும்.
நெடுஞ்சாலைப் பயணம் மிகக் கவனம் மக்களே!