புவனேஸ்வர் : ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. குறிப்பாக, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று மாலை 7 மணி அளவில் 3 ரயில்கள் மோதிக் கொண்ட மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. முதலில், பெங்களூரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட ரயில் மீது மோதியது.
இதனால், அந்த ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதின. மூன்று ரயில்கள் சிக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நிகழ்ந்த உடன் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ரயில்வே பாதுகாப்புப் படை, காவல்துறை, தீ அணைப்பு மற்றும் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்டவை விரைந்து வந்து 15 மணி நேரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டன.
விபத்துக்குள்ளான கோரமண்டல விரைவு ரயிலில், சென்னை வருவதற்கு 869 பேர் முன்பதிவு செய்திருந்தனர். காயமின்றி தப்பியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். முன்பதிவு விவரங்களை வைத்து உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
அடையாளம் காணப்பட்ட உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. காலை நிலவரப்படி 88 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடையாளம் காண முடியாத உடல்கள், உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் எத்தனை பேர் பயணித்தனர் என்று தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த விபத்தில் 280 பேர் தற்போது வரை உயிரிழந்த நிலையில், அதில் பலர் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
முன்பதிவு செய்யாமல் பயணித்தவர்களில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்தவர்களின் விவரங்கள் பெறப்படாது என்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.
இன்று மாலை சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படுகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் இந்த ரயிலில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அவர்கள் சென்றபிறகு, உடல்களை அடையாளம் காண்பது தீவிரமடையும் எனத் தெரிகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஐஜி நரேந்திர சிங் புண்டேலா, “தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 9 குழுக்கள் விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளையும் மறுசீரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த விபத்தில் 17 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவை்கப்பட்டுள்ளனர். விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது விசாரணைக்குப் பிறகு தெரிய வரும்.” எனத் தெரிவித்துள்ளார்.