தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதன்படி நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி, பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது “வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என கூறமுடியாது. அனைத்துப் பள்ளிகளிலும் கூடுதல் பொறுப்புடன் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே எத்தனை மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்ற முழு விவரம் அறிவிக்கப்படும்.
வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் பல்வேறு வகையான கோரிக்கைகள், நிதி நிலைமைக்கேற்ப படிப்படியாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றும்.
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் வகுப்புக்கு ஏற்கனவே ரூ.200 வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகையும் வசூல் செய்ய கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எதற்காகவும் கட்டணம் வசூல் செய்யக் கூடாது. அதையும் மீறி வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.