மகாராஷ்டிராவில் மாணவர்கள் மத்தியில் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பாடத்திட்டத்தில் விவசாயம் தொடர்பான பாடத்தை சேர்க்க மகாராஷ்டிரா மாநில பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான செயல்முறையை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை வேளாண் துறை உருவாக்கியுள்ளது. 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த வேளாண்மை பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இப்பாடத்திட்டத்தின் படி, நகர்ப்புற மாணவர்களுக்கு செயல்முறை விளக்கத்துடன் எப்படி பாடம் நடத்த முடியும் என்று ஆசிரியர்கள் கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“மும்பை போன்ற பெருநகரங்களில் விவசாயம் தொடர்பாக செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் சவாலானது” என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆனால், வேளாண்மை தொடர்பான பாடத்திட்டம் ஏற்கெனவே தற்போது இருக்கும் பாடப்புத்தகத்தில் இடம் பெற்று இருப்பதால் தனிப்பாடத்திட்டம் தேவையில்லை என்று ஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் கீழ் வேளாண் தொடர்பான பாடம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று மகாராஷ்டிரா செகண்டரி மற்றும் ஹையர் செகண்டரி போர்டு தெரிவித்துள்ளது. அதோடு தொழில் கல்வி, கைவினை பொருள் தயாரித்தல், விவசாயம் போன்றவை பாடத்திட்டத்தில் இடம் பெறவேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் புனேயில் நடந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், வேளாண் பாடத்திட்டத்தை உருவாக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார். அதற்கான பாடத்திட்டம் தயாரிக்க மகாராஷ்டிரா பிரதமிக் சிக்ஷன் பரிஷத் வேளாண்மைத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.
அனைத்து வகுப்புகளிலும் விவசாயம் தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் திட்டத்தை உயர்மட்ட கமிட்டி உருவாக்கி உள்ளது. இக்கமிட்டியில் வேளாண்துறை, கல்வித்துறை, வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
விவசாயம் தொடர்பான முக்கிய பகுதிகள், வேலை வாய்ப்பு, முக்கியத்துவம், என விவசாய தகவல்கள் தொடர்பாக மூன்று கட்டமாக இப்பாடத்திட்டம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படும்.
வேளாண்மை துறையின் அறிக்கையின் அடிப்படையில், 6 முதல் 8-வது வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வேளாண்மை தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. எனவே வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பாடங்கள் நடத்தப்படும்.