மூன்று ரயில்களும் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “ஒடிசா மாநிலம், பாலசோர் அருகில் மூன்று ரயில்கள் மோதியதில் ரயிலில் பயணித்தவர்கள் பல நூறு பேர் மரணமடைந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
படுகாயமடைந்த ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த கோரச்சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கும், காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளதுடன், அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையிலான குழு ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகளை முதலமைச்சர் தீவிரப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சார்ந்த பயணிகளை அடையாளம் கண்டு பத்திரமாக திரும்புவதற்கான அவசர உதவி மையங்கள் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், படுகாயமுற்றவர்களுக்கு தரமான சிகிச்சையும் – உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும், மூன்று ரயில்களும் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளானது குறித்து வெளிப்படையான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.