சேத்தியாதோப்பு அருகே, முதியோர் உதவித் தொகைக்கு போட்டோ எடுப்பதாக ஏமாற்றி, இரு பெண்களிடம் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, கட்டுக்கரையை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி அகிலாண்டம், 69. இவரது வீட்டிற்கு கடந்த 12ம் தேதி வந்த நபர், தாலுகா அலுவலகத்தில் இருந்து வருவதாகவும், முதியோர் உதவித் தொகைக்கு போட்டோ எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார்.
அப்போது நகை அணிந்திருந்தால் உதவித் தொகை கிடைக்காது. அதனால் கழட்டி வைக்குமாறு கூறினார். அதை நம்பி அகிலாண்டம் 4 கிராம் தோட்டினை கழட்டி வைத்தார். மூதாட்டி அசந்த நேரம் பார்த்து நகையை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.
அதே போல், கடந்த 24ம் தேதி ஒரத்துார் அடுத்த வடஹரிராஜபுரம், எம்.ஜி.ஆர்., சாலையை சேர்ந்த ஜெயசெல்வி, 55; என்பரிடமும் இதே போல், 4 சவரன் செயினை திருடிச் சென்றார். இது குறித்த புகார்களின் பேரில், சேத்தியாத்தோப்பு மற்றும் ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர் குறித்து விசாரித்தனர். அதில், மதுராந்தகநல்லுாரைச் சேர்ந்த ஆசைக்குமார், 49, என்பவர் இருவரிடமும் நகையை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து ஆசைக்குமாரை ஒரத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்த நான்கரை சவரன் நகையை பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement