புவனேஸ்வர்: சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் ரயிலில் பி 3 கோச்சில் கட்டாக் செல்ல புக்கிங் செய்திருந்த அப்பா, மகள் இருவர், அங்கு படுக்கை வசதிகள் கிடைக்காத காரணத்தால் பி1க்கு பெட்டி மாறி சென்றுவிட்டனர். இதனால் கடைசி நேரத்தில் அவர்கள் உயிர் தப்பி உள்ளார்கள்.
கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. சுமார் மாலை 6.30 மணி அளவில் பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் அதே தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், அங்கு நிறுத்தப்பட்ட பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோரவிபத்தில் இதுவரை 288 பேர் இறந்துள்ளார்கள். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த விபத்தில் சிக்கி பல பெட்டிகள் முற்றிலும் சிதைந்த போயின. அதில் இருந்து பயணிகள் உடல்கள் வெளியே எடுக்க முடியாத அளவிற்கு இருந்தது. பல மணி நேர முயற்சிக்கு பிறகு மீட்டு மருத்துவமனைக்கு மீட்பு படையினர் கொண்டு சென்றனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் இரண்டு பொதுப்பெட்டிகளில் யாருமே உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர பி3 உள்பட பல்வேறு பெட்டிகளும் முற்றிலும் சேதம் அடைந்தது . இதிலும் ஏராளமானோர் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் பி3 பெட்டியில் இருந்து பி1 பெட்டிக்கு மாறியதால் ஒரு அப்பா மகள் உயிர்தப்பி உள்ளார்கள். இது தொடர்பாக விக்ரம் சமால் என்பவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேற்று இரவு நடந்த விபத்தால் நிலைகுலைந்த மனதிற்கு அதிகாலையில் வந்த செய்தி சற்று ஆறுதலாக இருந்தது. என்ன செய்தி என்றால், இந்த புகைப்படத்தில் உள்ள பெண் குழந்தை நேற்றிரவு காரக்பூரிலிருந்து கட்டாக் நகருக்கு என்னுடன் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக தனது தந்தையுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவளுடைய தந்தை ரயில்வேயில் இருக்கிறார், அவர்கள் B3 இல் அமர்ந்திருந்தனர்.
ஆனால் அவர்கள் B3 இல் படுக்கை வசதியை பெற முடியவில்லை. இதனால் B1 க்கு மாற வேண்டியிருந்தது. விபத்துக்குப் பிறகு B1 பாதிப்பில்லாமல் தப்பிவிட்டது. ஆனால் B3 கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது”என்று விக்ரம் சமால் கூறியுள்ளார். இதன் மூலம் அப்பா மகள் இருவரும் கடைசி நேரத்தில் உயிர் தப்பி இருப்பது தெரியவந்துள்ளது.