இசைஞானி இளையராஜா இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தலைமுறை கடந்து தமிழ் மக்களை தனது இசையால் தாலாட்டி வரும் உன்னத கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி….
1976ல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த இந்தப் பாடல் ஏர் ஓட்டுபர் முதல் கார் ஓட்டுபவர் வரை சுண்டி இழுத்தது.
தமிழ் திரைப்படங்களில் அதுவரை வெளிவந்திருந்த இசையில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது அன்னக்கிளி படத்தின் பாடல்கள்.
தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் இருந்து கருத்த நிறத்தில் மெலிந்த தேகத்துடன் வந்திருந்த இளையராஜா என்கிற அந்த இளைஞனுக்குள் அற்புதமான ஒரு கலைஞன் இருக்கிறான் என்பதை தமிழ் திரையுலகம் அன்றுதான் கண்டது.
முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜா, தொடர் வெற்றிகளின் மூலமும், தனது இசை மேதைமையின் மூலமும் ரசிகர்களை மயக்கிக் கட்டிப்போட்டு தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராகக் கோலோச்சினார்.
80களின் தொடக்கத்தில் இருந்து படு பிசியாகத் தொடங்கிய இளையராஜாவிடம் எப்படியாவது நான்கைந்து பாடல்களை வாங்கிவிட வேண்டும் என இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கால்கடுக்க காத்திருக்கத் தொடங்கினர்.
முன்னணி இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள், ராசியான தயாரிப்பாளர் என பேதங்கள் பாராமல், எல்லோருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தவர் இளையராஜா.
ஒன்றிரண்டு திரைப்படங்களுடன் வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போன இயக்குநர்களின் படங்கள் கூட இன்றைக்கும் பேசப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் இளையராஜா என்ற ஆளுமை.
அவரது பாடல்களுக்காகவே காலம் கடந்து பேசப்படும் படங்கள் ஏராளம் உண்டு. உள்ளூர் பாரம்பரிய இசையோ, நவீன மேற்கத்திய இசையோ என்ன கேட்டாலும் சளைக்காமல் அள்ளித் தரும் அட்சய பாத்திரம் இளையராஜா என்றால் அது மிகையாகாது.
ஆகச்சிறந்த ஆன்மீகவாதியான இளையராஜாவின் பக்திப் பாடல்கள் திரைப்படங்களிலும் சரி, தனி ஆல்பமாகவும் சரி தனித்துவமாகவே இருக்கும்…
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பை மட்டுமே தனி ஆல்பமாகப் போடலாம். அந்த அளவுக்கு அனைத்துவிதமான உணர்வுகளுக்கும் காட்சிகளுக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கும் அவரது பின்னணி இசை…
கலைமாமணி விருது தொடங்கி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மத்திய, மாநில அரசுகளின் ஏராளமான விருதுகள் இளையராஜாவால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளன.
இசைக்கு என்றும் ராஜாவாக விளங்கும் இசைஞானி இளையராஜாவின் புகழ், வையகம் உள்ள வரை வாழ்ந்துகொண்டே இருக்கும்.