மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் ‘நினைவெல்லாம் நித்யா’ என்றுதான் இருந்திருப்பார். சுறுசுறுப்பில் சூரியனுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் கலைஞருக்கு, குறிப்பாக அவர் உடல்நலம் குன்றியிருந்த காலகட்டத்தில் காலையில் எழுந்து இரவு தூங்கும்வரை நிழலாக இருந்தவர்தான் இந்த நித்யானந்தம் என்கிற நித்யா.
கலைஞரிடம் 21 வயதில் உதவியாளராக வந்தவர், அவரைக் கவனிப்பதற்காக திருமணமே செய்துகொள்ளவில்லை. தாயை இழந்த குட்டிபோல் தவித்துக்கொண்டிருக்கும் நித்யாவிடம் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி பேசினேன்.
“அப்பா கழக உறுப்பினர் என்பதால் இயல்பிலேயே எனக்கும் தி.மு.க மீது பற்று அதிகம். தேர்தல் பணிகளுக்காக பேராசிரியரிடம் மூன்றுமாதம் இருந்தேன். அந்த அறிமுகம்தான் கலைஞர் ஐயாவிடம் பணிபுரிய என்னைப் பரிந்துரை செய்யவைத்தது. முதல்ல நேரடி உதவியாளரா சேர்ந்து 2006-ஆம் ஆண்டு முதல் தனி உதவியாளரா மாறினேன். அதிலிருந்து, ஐயாவின் கடைசி காலம் வரை கூடவே இருந்து பார்த்துக்கிட்டேன். ஐயாகிட்ட வேலைக்கு சேர்ந்த முதல்நாளே காலுக்கு ஷூ மாட்டிவிட்டேன். ‘நீ படிச்ச படிப்புக்கு இப்படியெல்லாம் பண்ணக்கூடாது. உன்னை பெத்தவங்கப் பார்த்தா எவ்ளோ கஷ்டப்படுவாங்க’ ன்னு சொல்லி தவிர்த்துட்டார். இப்படி, எனக்கு முதல்நாளே மறக்க முடியாததாய் அமைந்தது.
வேலைக்கு சேர்ந்த புதுசுல காலைல 6.30 மணிக்கு வந்துட்டு, நைட்டு 9.30 க்குத்தான் வீட்டுக்குப் போவேன். ஒருதடவை காலையில லேட்டா வந்துட்டேன். ஐயா கதவைத் திறக்கவே இல்ல. அப்புறமா, போய் மன்னிப்புக் கேட்டேன். ‘போடா… போ எனக்கு யாரும் வேணாம்’ன்னு அன்பா கோவிச்சுக்கிட்டார். முதல்தடவையா என்கிட்ட கோவப்பட்டது அப்போதான். அதிலருந்து, அவரைப் புரிஞ்சிக்கிட்டு தாமதமா போனதே இல்ல.
தன்னை சார்ந்தவங்களும் நேரத்தை சரியா கடைபிடிக்கணும்னு விரும்புவார். 2008-ஆம் ஆண்டு ஐயாவுக்கு நடந்த முதுகுத்தண்டு ஆபரேஷனுக்குப்பிறகு முழுநேரமா இருந்து பார்த்துக்க ஆரம்பிச்சேன். லட்சோப லட்சம் தொண்டர்கள் காத்துக்கிட்டிருக்கும்போது, ஐயாவோட, ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அம்மாவுக்கு அடுத்து நான்தான் வாழ்த்து சொல்வேன். எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் அது. இப்போவும், பிறந்தநாளின்போது நினைவிடம் சென்று வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் வந்திட்டிருக்கேன்”.
“2009-ஆம் ஆண்டு ஈழத்தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்ததை, நாடகம் என்று விமர்சிக்கப்படுகிறதே? உங்கள் கருத்து என்ன?”
“அன்னைக்கு காலையிலேயே உண்ணாவிரதம் இருக்க யார்கிட்டயும் சொல்லாம கிளம்பினார். “ஐயா, ரெண்டு இட்லி மட்டும் சாப்ட்டு போங்க” என்றேன். ‘என்னை சாப்ட்டுட்டுப் போய், பொய்யா உண்ணாவிரதம் இருக்கச் சொல்றியா? எனக்கு காஃபிகூட வேணாம். என்ன ஆனாலும் பரவாயில்லை’ன்னு கடுமையா திட்டிட்டார். அவர் போனது மருத்துவர்களுக்குக்கூட தெரியாது. ஈழத்தமிழர் பிரச்சனைக்காக தனது வயிற்றுப் பசியையும் மறந்து உண்மையாக உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசு உத்திரவாதம் கொடுத்ததால்தான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். போர் உச்சத்தில் இருந்தபோது ரொம்ப வருத்தமும் வேதனையும் அடைந்தார். எப்படியாவது அந்த மக்களைக் காப்பாற்ற முடியாதா? என்று மத்திய அரசிடம் முழுவீச்சில் பேசிக்கொண்டிருந்தார்”.
“ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி ஆறு மாதங்கள் சிறையில் இருந்தபோது, ஒரு தந்தையாக அவரது மனநிலை எப்படி இருந்தது?”
“ஐயாவின் இருண்ட நாட்கள் என்றால் அதைத்தான் சொல்வேன். அக்கா சிறையில் இருந்தபோது மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். வாரத்துக்கு ஒருமுறை அக்காவைப் போய் பார்த்துட்டுத்தான் வருவாங்க. அப்படி போய்ட்டு வந்துட்டு மறுநாள் காலை உணவைக் கொடுத்தபோது, `ஓ’ன்னு அழுதுட்டாங்க. ‘என் பொண்ணு சிறையில் இருக்கும்போது, எனக்கு இந்த உணவு தேவையா என்று ரொம்பவே கதறி அழுதார். அம்மாதான், ‘தைரியமா இருங்க. நம்மப் பொண்ணு வந்துடும்’னு சமாதானப்படுத்தினாங்க. ஐயாவுக்கு எவ்ளோ வருத்தம் இருந்தாலும் அக்கா முகத்தைப் பார்த்தா தெம்பாகிடுவாங்க. அந்த நாட்களில் அக்கா குறித்தே சிந்தித்துக்கொண்டிருப்பார்”.
“2011, 2016-ஆம் ஆண்டு தேர்தல்களில் தி.மு.க தொடர்ச்சியாக தோல்வியடைந்தபோது தோல்விகளை எப்படி எதிர்கொண்டார்?”
“தோல்விகளைக் கண்டு துவண்டுப் போகாதவர் அவர். 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்பு விழாவை டிவியில் பார்த்துவிட்டு ஐயாகிட்ட , ” ஐயா தப்பா எடுத்துக்காதீங்க. அந்த அம்மா உடம்பு முடியாம இருக்காங்க. இன்னும் ஆறு மாசம்தான் இருப்பாங்கன்னு தோணுது. அப்புறம் தேர்தல் வந்துடும்ங்கய்யா. நீங்க மக்களை சந்திச்சு சி.எம் ஆகிடுவீங்கய்யா” என்றேன். அதற்கு, ‘இப்படியெல்லாம் பேசக்கூடாது. அந்த அம்மையார் இன்னும் அஞ்சு வருஷம் முதல்வரா இருக்கட்டும். அதுக்கப்புறம் தேர்தல் வரட்டும். அப்போ, நான் பொதுமக்களை சந்திச்சு சி.எம் ஆகிக்கிறேன். அந்த அம்மா நல்லா இருக்கட்டும். அதுவரை என்னை நீ நல்லா பார்த்துக்கோ’ என்றார்.
பதவிக்காக தரம்தாழ்ந்து பேசும் காலத்தில் ஐயா, ஜெயலலிதாவை எப்போதும் மிகுந்த மரியாதையுடன்தான் பேசுவார். இறந்தபோதுகூட டிவியில் பார்த்து ‘அவங்க இல்லையே’ என்று ரொம்ப வருத்தப்பட்டார்”.
“ஓய்வுநேரத்தில் திரைப்படங்கள் எல்லாம் பார்ப்பார். எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா படங்கள் பார்ப்பதுண்டா?”
“தினமும் கலைஞர் டிவியில் பழைய பாடல்களைப் போடுவாங்க. அப்போ, எம்.ஜி.ஆர் – கே.ஆர் விஜயாவின் ‘பணம் படைத்தவன்’ படத்திலிருந்து ‘அந்த மாப்பிள்ளை’ பாட்டு ஓடிக்கிட்டிருந்துச்சு. சும்மா பார்வைக்குன்னுப் பார்க்காம ஆர்வமா ரசிச்சுக்கிட்டிருந்தார். “என்னய்யா இப்படி ரசிக்கிறீங்களே… எம்.ஜி.ஆரை அவ்ளோ பிடிக்குமா?” என்றேன். ‘இல்லாடா சிவாஜிகிட்ட ஒரு ரோல் கொடுத்தா, அந்த ரோலுக்கு மட்டும்தான் வேஷம் போட்டு நடிப்பார். ஆனா, எம்.ஜி.ஆர் அப்படி கிடையாது. இன்னும் அதிக இன்வால்வ்மென்டோட தன்னை தயார்படுத்திக்கிட்டு நடிப்பார்’ என்றார். எம்.ஜி.ஆர் மீதும் நட்பு ரீதியாக பாசமும் மரியாதையும் கொண்டிருந்தார். டிவியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்கள் டிவியில் ஆஃப் பண்ணுன்னு சொன்னதே இல்ல. அதையும் ரசிச்சுப் பார்ப்பார்”.
“அவர் முதல்வராக இருந்த 2006-காலகட்டத்தில்தான் விஜயகாந்த்தும் அரசியலுக்குள் வந்தார். விஜயகாந்த் மீது அவரது அபிப்ராயம் என்ன?”
“சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் முதல்வர் தலைமையில் கூட்டம் நடக்கும். எதிர்கட்சி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் இருந்தாங்க. அப்போ, விஜயகாந்த் சாரும் தனியா வந்தார். அவருக்கு உட்கார இருக்கை இல்லை. ‘வா கேப்டன்’ என்றே அழைத்து பக்கத்துலேயே அமர வைத்துக்கொண்டார். இந்த சம்பவத்தை என் கண்ணால் பார்த்தேன். ஐயா விரும்பியவர் விஜயகாந்த். ரெண்டுப்பேருக்குமே பாசம் உண்டு. எப்போ, வீட்டுக்கு வந்தாலும் ரெண்டு பேருமே பாசமா எண்ணங்களைப் பகிர்ந்துக்குவாங்க”.