ஒடிசா ரயில் விபத்தைத் தடுத்திருக்குமா 1 கி.மீ-க்கு ரூ. 50 லட்சம் செலவாகும் `கவச்' தொழில்நுட்பம்?

ஒடிசா ரயில் விபத்து நடந்ததுமே பலரும் ஆதங்கத்துடன் சொன்ன முதல் விஷயம், ‘விபத்து தடுப்பு பாதுகாப்பு அமைப்பான கவச் இந்த ரயில்களில் பொருத்தப்பட்டிருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது’ என்பதுதான். அது என்ன கவச்?

போர்க்களத்தில் வீரர்களைப் பாதுகாக்கும் கவசம் போல, இது ரயில்களில் விபத்து நடப்பதைத் தடுக்கும் கவசம். இது வெற்றிகரமாக செயல்படுகிறதா என்பதைப் பரிசோதிக்க, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன் உயிரைப் பணயம் வைத்து கடந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி ஒரு சோதனையில் ஈடுபட்டார். தெற்கு மத்திய ரயில்வேயில் குல்லகுடா மற்றும் சிட்டிகிடா ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையில் இந்த சோதனை நடைபெற்றது. ஒரே ரயில்வே டிராக்கில் எதிரெதிரே இரண்டு ரயில்கள் வரும்போது, இந்த கவச் செயல்பட்டு ரயிலை நிறுத்துகிறதா என்ற சோதனை. 

கவச் கருவி பொருத்தப்பட்ட ரயிலின் இன்ஜின் அறையில் அமைச்சர் இருந்தார். அந்த ரயில் வேகமாக வர, அதே டிராக்கில் எதிர்திசையில் இன்னொரு இன்ஜின் நின்றிருந்தது. தூரத்திலேயே அந்த ரயிலை உணர்ந்துவிட்ட கவச் கருவி, உடனடியாக சிவப்பு விளக்கை எரியவிட்டு அபாய ஒலி எழுப்பி எச்சரித்தது. அப்போதும் ரயில் நிற்காமல் செல்ல, அதன்பின் தானாகவே அது பிரேக்கை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ரயிலை நிறுத்தியது. டிராக்கில் எதிரே ரயில் இருப்பதை உணர்ந்து 380 மீட்டர் தூரத்திலேயே ரயில் நின்றது. பரிசோதனை வெற்றி.

ஒடிசா ரயில் விபத்து

ரயில்கள் மோதி மோசமான விபத்துகள் நடப்பதைத் தடுக்க உலகெங்கிலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. சிக்னலே மோதி ரயிலை நிறுத்துவது, மின் அதிர்வுகளை செலுத்தி பிரேக்கை இயக்குவது, காந்த சக்தி மூலம் பிரேக்கை இயக்குவது, ரேடியோ அலைகள் மூலம் தகவல் அனுப்பி எச்சரிப்பது, அருகில் உள்ள ரயில்கள் பற்றிய தகவல்களை வயர்லெஸ் சிக்னல் மூலம் பெறுவது என்று ரயில்களிலும் மெட்ரோ ரயில்களிலும் பல சிஸ்டம்கள் பயன்படுகின்றன.

இவற்றில் ரேடியோ அலைகள் மற்றும் அலைக்கற்றை சிக்னல்கள் மூலம் தகவல்கள் பெறுவதே லேட்டஸ்ட் தொழில்நுட்பம். இதற்கு ரயில்களிலும் பிரத்யேக கருவிகள் பொருத்த வேண்டும்.

இதுதவிர ரயில்வே ஸ்டேஷன்கள், சிக்னல் கட்டுப்பாட்டு அறைகள், தண்டவாளங்கள் என்று எல்லா இடங்களிலும் எலெக்ட்ரானிக் கருவிகள் பொருத்த வேண்டும். ஒரு கிலோமீட்டர் தூர தண்டவாளத்தில் இந்தக் கருவிகளைப் பொருத்த இரண்டு கோடி ரூபாய் வரை செலவாகலாம். அதனால் வசதியான நாடுகளுக்கு மட்டுமே பொருந்துகிற தொழில்நுட்பமாக இது இருந்தது. 

kavach technology

‘விபத்துகளே இல்லாத பயணத்தை இந்தியர்களுக்குத் தர வேண்டும்’ என்ற இலக்குடன் இந்திய ரயில்வே ஒரு மோதல் தடுப்பது பாதுகாப்பு அமைப்பை உருவாக்க 11 ஆண்டுகளுக்கு முன்பே முயன்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் கவச். அதன்பின் பல்வேறு பரிசோதனைகளைக் கடந்து கடந்த ஆண்டுதான் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி அமைப்பான Research Design and Standards Organization (RDSO) இதனை பல்வேறு இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியது. இதை ரயில்களிலும் தண்டவாளங்களிலும் நிறுவ, ஒரு கிலோமீட்டருக்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும். உலகத்தரமான ஒரு கருவியை நான்கு பங்கு குறைவான செலவில் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கி சாதனை படைத்தார்கள்.

இந்தியாவின் தேவைகளை உணர்ந்து உருவாக்கப்பட்ட விபத்து தடுப்பு அமைப்பு இது. எலெக்ட்ரானிக் கருவிகளை ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் தண்டவாளங்களிலும் பொருத்தி, ரேடியோ அலை சிக்னல்கள் மூலம் தகவல்களைப் பெறுவார்கள்.

பெரும்பாலும் சிவப்பு சிக்னலை கவனிக்காமலோ, சிக்னல் தவறாலோ ரயில் தவறான பாதையில் சென்று விபத்துகள் நடக்கின்றன. அதுபோன்ற சமயங்களில் இந்தக் கருவி செயல்பட்டு அலாரம் அடித்து ரயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கும். அதன்பின் தானே செயல்பட்டு பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்தி மோதலைத் தடுத்துவிடும். 

லெவல் கிராசிங்குகளை நெருங்கும்போது விசில் எழுப்பி அலெர்ட் ஆக்கும். குறித்த வேகத்தைவிட அதிவேகமாக ரயில் சென்றால், எச்சரித்து வேகத்தையும் குறைக்கும். பனிமூட்டமான நேரங்களில் பாதையே தெரியாது. அதுபோன்ற சூழல்களிலும் இது சிறப்பாக செயல்பட்டு மோதல்களைத் தடுக்கும். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில் சென்றாலும்,  இதன் எச்சரிக்கைகள் துல்லியமாக இருக்கும். 

ஒடிசா ரயில் விபத்து

கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே கவச் கருவி பொருத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக இதுவரை 65 ரயில்களில் இது பொருத்தப்பட்டுள்ளது. 134 ரயில் நிலையங்களிலும் 1,445 கி.மீ நீள தண்டவாளங்களிலும் கருவிகள் பொருத்தப்பட்டுவிட்டன. அதிக ரயில்கள் இயங்கும் பாதைகள், இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து ரயில்கள் செல்லும் பாதைகள் ஆகியவற்றுக்கு இப்போது முன்னுரிமை கொடுக்கிறார்கள். செலவு அதிகம் என்பதால், இந்தியா முழுக்க இது பயன்பாட்டுக்கு வர இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம். 

விபத்தை சந்தித்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலிலோ, அந்தப் பாதையிலோ இந்த கவச் விபத்து தடுப்பு அமைப்பு பொருத்தப்படவில்லை என்பது சோகம். ஒருவேளை இந்தக் கோர விபத்தின் விளைவாக கவச் பொருத்தும் பணி விரைவுபடுத்தப்படலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.