ஒடிசா ரயில்கள் விபத்து; விபத்தா அல்லது திட்டமிட்டச் சதியா..? – சீமான்

கோரமண்டல் தொடர்வண்டி விபத்தில் சிக்கிய அனைவரையும் விரைந்து மீட்டு உயர் மருத்துவம் அளித்திட வேண்டும் என்று

வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு தொடர்வண்டி ஒடிசா மாநிலம் பாஹாநாகா பஜார் தொடர்வண்டி நிலையம் அருகே விபத்துக்குள்ளான செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன்.

இக்கோர விபத்தில் சிக்கி, 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமுற்ற செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற செய்தி கவலையையும், துயரத்தையும் தருகிறது. இக்கொடிய விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். படுகாயமுற்றோர் விரைந்து நலம்பெற்று திரும்பிட விழைகிறேன்.

இக்கொடும் நிகழ்வு எதிர்பாரத விபத்தா அல்லது திட்டமிட்டச் சதியா அல்லது அதிகாரிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டதா என்பதை உடனடியாக இந்திய ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும். வனப்பகுதியில் நடந்த இக்கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் வன்மையான கண்டனத்திற்குரியது. பயணிகளை மீட்பதிலும், அவர்களுக்கு உரிய மருத்துவம் அளிப்பதிலும் எவ்வித தாமதமும் ஏற்படாமலிருக்க ஒடிசா மாநில அரசும், இந்திய ஒன்றிய அரசும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு மீட்புப்பணியை விரைவுப்படுத்த பேரிடர் மீட்புப் படையினர் மட்டுமல்லாது துணை ராணுவத்தையும் உடனடியாக அனுப்ப வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்தான தகவல்களை உடனுக்குடன் அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும், துயர் துடைப்பு உதவிகள் வழங்கிடவும் தமிழ்நாடு அரசு மீட்புக்குழு ஒன்றினை விரைந்து அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 லட்சமும், காயமுற்றோருக்கு தலா ரூபாய் 10 லட்சமும் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமென இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.